Saturday, December 6, 2008

ஸார் டிக்கெட் ப்ளீஸ்........



வீட்டுக்கருகில் இருக்கும் பஸ் ஸ்டாப். ஐ.டி காரிடாரின் ஆரம்பத்தில் இருக்கும் முக்கிய ஜங்ஷன் என்பதால் எந்நேரமும் பேருந்து பயணச்சீட்டுகளை பரிசோதனை செய்யும் செக்கிங் இன்ஸ்பெக்டர்களின் தொல்லை மிகவும் அதிகம். நேரம் காலம் தெரியாமல் பீக் அவரில் பஸ்ஸை ஓரங்கட்டி செக்கிங் என்ற பெயரில் கொடுமை செய்து கொண்டிருப்பார்கள். அவ்வப்போது சில காமெடியான நிகழ்ச்சிகளை காண நேரிடும். இன்று காலையில் ஒரு அனுபவம்.

இன்று காலையில் பேருந்துக்காக காத்துக் கொண்டிருந்தேன். என்னருகில் வழக்கம்போல் செக்கிங் இன்ஸ்பெக்டர் 4 பேர் கருமமே கண்ணாயிரமாக தங்கள் பணியை செய்ய காத்துநின்றனர். அப்போது கோயம்பேட்டிலிருந்து ஒரு பேருந்து வேகமாக வந்தது. கூட்டம் வெகு குறைவு. கிட்டத்தட்ட காலியாக இருந்த பேருந்தில் ஒருவர் ஒரு காலை வெளியில் தொங்கவிட்டபடியே புட்போர்டு அடித்தபடி வந்தார். பார்ப்பதற்கு பக்கா கிராமத்து ஆள் லுக். காதுவரைக்கும் வைத்திருந்த மீசையும், உள்ளே போட்டிருந்த பிங்க் கலர் பனியன் தெரியுமளவுக்கு டிரான்ஸ்ப்ரண்டான வெள்ளை சட்டையும் அணிந்து கலக்கலாக இருந்தார். மெட்ரோவுக்குள் இவ்வளவு வித்தியாசமாய் வந்ததாலோ என்னவோ முதல்பார்வையிலேயே என்னைப்போல் பலரது கவனத்தையும் கவர்ந்தார். சுவாரசியமாய் அவரையே பார்த்துக் கொண்டிருந்தேன். அந்த பஸ்ஸில் டிக்கெட் செக் செய்ய ஆயத்தமாயினர் 4 ஆபிஸர்ஸ்.

நம்மாளோ பேருந்து நிற்பதற்கு முன்னரே அதிலிருந்து குதித்து இறங்கினார். இறங்கியவர் யாரையும் கவனிக்கவில்லை. வேகமான நடையில் ரோட்டைக்கடந்து அடுத்தபக்கம் செல்ல ஆரம்பித்தார். செக்கிங் இன்ஸ்பெக்டர்களும் அவரை சற்று தாமதமாகத்தான் கவனித்தனர்.

இனி அவர்களுக்கு இடையே நடந்த உரையாடல்....

இன்ஸ்: ஹலோ மிஸ்டர்.....

நம்மாளிடம் பதிலே இல்லை...

இன்ஸ்: ஹலோ உங்களைத்தான்....

நம்மாளோ திரும்பி பார்க்கவேயில்லை.

இன்ஸ்: யோவ்... வெள்ளைசட்டை உன்னைத்தாய்யா... (கிட்டத்தட்ட அவர் பின்னாலேயே ஓடினார்)

நம்மாள் இப்போது கொஞ்சம் ஸ்லோ ஆனார். ஆனால் அங்கேயே நின்றார்.

இன்ஸ்: ஏய் மீசை.. உன்னைத்தான்யா கூப்பிடறேன்.. (செம கடுப்பில்)

நம்மாள் மெதுவாக திரும்பிப்பார்த்து, யாரை என்னையா? என்பதுபோல் சைகைசெய்தார்.

இன்ஸ்: உன்னைத்தாய்யா... வா இங்கே.. என்றார் அதே ஏகவசனத்தில்...

அதைக்கேட்ட நம்ம ஆளுக்கு வந்த கோபத்திலே கண்கள் சிவந்துடுச்சு. மீசை வேற துடிக்க ஆரம்பிச்சுடுச்சு.இந்த மீசை துடிக்கிறது எல்லாம் நிறைய பாரதிராஜா சினிமாவுல பார்த்திருக்கேன். இப்பத்தான் முதல்தடவை நேரிலே பார்த்தேன்.

வேகவேகமாக திரும்பிவந்தார் இறங்கிய இடத்துக்கே..

நம்மாளு: யாரைப்பார்த்து ஏய்ன்னு சொன்னே? (கர்ணகடூரமான குரலில்)

இன்ஸ்: உன்னைத்தான்.

நம்மாளு: டேய்! நான் யார்ன்னு தெரியுமா? என்னைப்பார்த்து எப்படிடா டேய்ன்னு சொன்னே?

இன்ஸ்: பஸ்ஸைவிட்டு இறங்கினால் டிக்கெட்டை கொடுக்க வேண்டியதுதானே..டிக்கெட் எங்கேங்க?

நம்மாளு: அப்படி மரியாதையா கேட்க வேண்டியதுதானே.. அதை விட்டுப்புட்டு என்னமோ மரியாதையில்லாம கூப்பிடறே? நீயெல்லாம் படிச்சவனாய்யா?

இன்ஸ்: ஹலோ மிஸ்டர்! மரியாதையா பேசுங்க..

நம்மாளு: நீ முதல்ல மரியாதையா பேச கத்துக்கய்யா.. ஏய்யாம்ல ஏய்... ஏதோ அசலூரா இருக்கவும் தப்பிச்சே.. இதுமட்டும் எங்க ஊரா இருந்ததுன்னு வையி.. ******(கெட்டவார்த்தை) பொலி போட்டிருப்பேன். தெரிஞ்சுக்க...

இதைக்கேட்ட இன்ஸ்பெக்டரின் முகம் சிறுத்துவிட்டது. பதில் பேசவேயில்லை. வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த சிலர் உள்ளேபுகுந்து விலக்கிவிட இன்னமும் முனகியபடியே அங்கிருந்து நகர்ந்தார் கிராமத்து பெருசு.

உணமையில் டிக்கெட் செக்கிங் என்ற பெயரில் இவர்கள் செய்வது கொஞ்சம் அட்டூழியம்தான். பீக் அவரில் பஸ்ஸை ஓரங்கட்டுவது. டிக்கெட் எடுக்காமல் யாரேனும் அகப்பட்டாலும் முடிந்தவரை பேரம்பேசி தனியே கறப்பது என தொடர்ந்து நடந்துகொண்டுதான் இருக்கிறது. நானே பலமுறை இந்த பேரம் நடப்பதை பார்த்திருக்கிறேன்.

எது எப்படியோ இனிமேல் அந்த செக்கிங் இன்ஸ்பெக்டர் யாராவது சிறுவனாக இருந்தால் கூட "ஸார் டிக்கெட் ப்ளீஸ்" என்றுதான் கேட்பார்.

Thursday, December 4, 2008

நடிகர் பிரபுதேவா மகன் மரணம்

பிரபல த‌மி‌ழ் நடிகரு‌ம், இய‌க்குனருமான ‌பிரபுதே‌வி‌ன் ம‌க‌ன் உட‌ல் நல‌க்குறைவா‌ல் இ‌ன்று காலை மரண‌ம் அடை‌ந்தா‌ர்.

நடன இய‌க்குனராக இரு‌ந்து நடிகர், இயக்குனரானவர் பிரபுதேவா. இவ‌ர் லதா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு விஷால் (13), ரிஷி, ராகவேந்திரா, ஆதித்தேவா என 4 மகன்கள்.

கட‌ந்த ‌சில மாத‌ங்களாக விஷா‌ல் உடல் நலக் குறைவா‌ல் செ‌ன்னை‌யி‌ல் உ‌ள்ள த‌னியா‌ர் மரு‌த்துவமனை‌யி‌ல் சிகிச்சையளிக்கப்பட்டு வந்தது. இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி விஷால் மரணம் அடைந்தார்.

விஷால் உடல் செ‌ன்னை ராஜாஅண்ணாமலைபுரத்தில் உள்ள அவரது வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு‌ள்ளது. நடிகர்கள், இய‌க்குன‌ர்க‌ள் உ‌ள்பட பல‌ர் அஞ்சலி செலுத்தின‌ர்.

விஷால் உடல் இன்று மாலை பெசன்ட் நகரில் தகன‌ம் செய்யப்படுகிறது

Wednesday, November 26, 2008

யுத்தம் சரணம் 3



பூரி ஜகந்நாதர், பிஜு பட்நாயக், நவீன் பட்நாயக், பரதேசப் பாதிரியார் ஒருவரை எரித்த பஜ்ரங் தளத்துச் செயல்வீரர், இன்னும் யோசித்தால் ஒன்றிரண்டு கிரிக்கெட் மேட்சுகளில் இந்தியாவுக்காக விளையாடிய தெபாஷிஸ் மொஹந்தி என்று ஒரிஸ்ஸாவைப் பற்றி நாம் அறிந்த செய்திகள் எல்லாம் வெகு சொற்பமாக இருக்கும். ஆந்திரக் கரையைத் தவறவிடும் புயல்கள் மட்டும் வருஷத்துக்கு ஒருமுறை ஒரிஸ்ஸாவைக் கடந்துபோகும். அப்போது வெள்ள நிவாரணம் கேட்பார்கள். மழையற்றுப் போனால் பஞ்ச நிவாரணம். நம் நாட்டில் இருக்கும் ஒரிஸ்ஸாதான். ஆனாலும் நமக்குக் கொஞ்ச தூரம். இல்லையா?

இதுவே கலிங்கம் என்கிற அதன் பழைய பெயரில் சொன்னால் உடனே மரம் நட்டு, பசுமைத் தாயகம் அமைப்பதற்கு முந்தைய காலகட்டத்து அசோக மன்னரின் யுத்தம் ஒன்று நினைவுக்கு வரும். கிறிஸ்து பிறப்பதற்கு முந்நூறு வருடங்களுக்கு முன்னால் பிறந்து, ஆண்டு அனுபவித்து, வாழ்ந்து, இறந்துவிட்டு, பாடப்புத்தகங்களில் மறுஜென்மம் எடுத்த மன்னர்.

மற்றபடி நமக்கு ஒரிஸ்ஸா அத்தனை நெருக்கமில்லை. ஆனால், இலங்கை மக்களுக்கு அது நெருக்கம். அசோக மன்னரின் கலிங்க யுத்தத்துக்கு வெகுகாலம் முன்னாலிருந்து அவர்களுக்கு ஒரிஸ்ஸா என்கிற கலிங்கம் பரிச்சயம். வெகுகாலம் என்றால் கி.மு. 543. பின்னாளில் இலங்கையின் முதல் மன்னனாக முடி சூடவிருந்த விஜயன், ஒரிஸ்ஸாவிலிருந்துதான் அங்கே புறப்பட்டுப் போனான்.


இலங்கையின் வரலாறை விஜயனிடமிருந்துதான் நாம் பேசத் தொடங்கவேண்டியிருக்கிறது. இது ஒரு விசித்திரம். ராஜராஜ சோழன் மாதிரி இங்கிருந்து படை திரட்டிக்கொண்டு போய் கொடி நாட்டி, நல்லாட்சியோ என்னவோ அளித்து, சரித்திரத்தில் இடம் பிடித்தவர்களைப் போல் விஜயனுக்கு கலர்ஃபுல் வெற்றிப் பின்னணிகள் கிடையாது. ஒரு தண்டனைக் கைதியாக ஒரிஸ்ஸாவிலிருந்து நாடு கடத்தப்பட்டவன். அதுவும் சும்மா இல்லை. பாதித் தலைக்கு மொட்டையடித்து, கப்பலேற்றி அனுப்பிவைத்தார் அவனது தந்தையான அந்நாளைய கலிங்க மகாராஜா.

ஆதி இலங்கையின் சரித்திரத்தைச் சொல்லும் மகா வம்சம், இந்தப் பாதி மொட்டை விவகாரத்தைக் குறிப்பிட்டாலும், விஜயன் அப்படியென்ன பெரிய குற்றம் செய்தான், மொட்டையடித்து நாடு கடத்துமளவுக்கு என்று விரிவாக விளக்குவதில்லை. `விஜயன் தீயவன், அவனது தொண்டர்களும் தீயவர்கள்' என்று ஒரு வரியில் முடித்துவிடுகிறது மகா வம்சம். நிறைய பொறுமையும் மாய யதார்த்த வகைக் கதை படிப்பதில் ஆர்வமும் இருந்தால் இந்தப் புத்தகத்தைப் படித்துப் பாருங்கள். ஜாலியாக இருக்கும்.

விஜயனின் தாத்தா ஒரு சிங்கம். சிங்கமென்றால், நிஜமான சிங்கம். இன்றைய பங்களாதேஷும் அன்றைய வங்க தேசமுமான குறுநிலத்தின் ராஜாவுக்கும், அவரது கலிங்க தேசத்து மனைவிக்கும் பிறந்த பெண்ணொருத்தி, இந்த சிங்கத்தைத் திருமணம் செய்துகொண்டு இரண்டு பிள்ளைகளைப் பெற்றாள். இளவரசி ஏன் சிங்கத்தை மணந்தாள் என்றெல்லாம் கேட்கக்கூடாது. சோதிடர்கள் அப்படித்தான் கணித்து வைத்தார்கள். எனவே அவள் அப்படியே செய்தாள். தீர்ந்தது விஷயம்.

அந்த இளவரசி சிங்க ஜோடிக்கு ஆணும் பெண்ணுமாக இரண்டு குழந்தைகள் பிறந்தன. சிக பாஹு என்பது பையனின் பெயர். சிக சிவாலி என்பது பெண்ணின் பெயர்.

வெளியே வேறு பெண் கிடைக்கவில்லையோ என்னவோ. சிக பாஹு, தன் சகோதரி சிக சிவாலியையே பின்னர் திருமணம் செய்துகொண்டு, வரிசையாக இரண்டிரண்டாகப் பதினாறு ஜோடி பிள்ளைகள் பெற்றான். மொத்த ஸ்கோர் 32. அதில் மூத்தவன்தான் மகா வம்சம் குறிப்பிடும் விஜயன்.

வாலிப வயதில் விஜயன் மிகவும் ஆட்டம் போட்டிருக்க வேண்டும். ஒரு கொடுங்கோல் இளவரசனான அவனை, நாட்டு மக்கள் மிகவும் வெறுத்து, மன்னருக்கு மனு கொடுத்தனர். உங்கள் பிள்ளையென்று பார்க்காதீர். அவனுக்கு அதிகபட்ச தண்டனை அளித்து எங்களை ரட்சிப்பீராக.

பிள்ளைப் பாசத்தால் கொல்லாமல் விடுத்து, பதிலுக்குப் பாதி மொட்டை அடித்து, அவனது எழுநூறு தொண்டர்களுடன் கப்பலேற்றி அனுப்பி வைத்தார் மன்னர் சிக பாஹு. ஒரு கப்பல் அல்ல. மூன்று கப்பல்கள்.

ஒன்றில் விஜயனும் அவனது ஆள்படைகளும். இன்னொன்றில் அந்தக் கூட்டத்தின் மனைவிமார்கள். வேறொரு கப்பலில் குழந்தை குட்டிகள்.

மன்னர் எதற்காக இப்படி தனித்தனிக் கப்பல்களில் அவர்களை அனுப்பவேண்டும்? துரதிருஷ்டவசமாக இப்போது கேட்டுத் தெளிவு பெற வசதியில்லை என்பதால், அதனை அப்படியே ஏற்றுக்கொண்டாக வேண்டும். விஜயன் கோஷ்டி தென் இலங்கைக்கு வந்து இறங்கியது. அவனது மனைவியும் அவன் கூட்டத்தாரின் மனைவிமார்களும் மஹில தீபிகா என்ற தீவுக்குச் சென்று இறங்கினார்கள். அந்த அப்புராணி பிள்ளை குட்டிகள் நாகத்தீவில் வந்து இறங்கின என்று மகா வம்சம் குறிப்பிடுகிறது.

மகா வம்சம் சொல்வது ஒருபுறமிருக்க, விஜயனின் பூர்வீகமான `சிம்மபுரா' என்கிற சிஹ புரா சமஸ்தானம் இந்தியாவின் மேற்கு மாகாணமான குஜராத்துக்குச் சமீபத்தில்தான் இருந்திருக்கிறது என்றும் சில வரலாற்றுக் குறிப்புகள் இருக்கின்றன. சிந்து நதிக்கு அந்தப்பக்கம் அதாவது இன்றைய பாகிஸ்தான், ஆப்கனிஸ்தான் பிராந்தியங்களில் எங்கோ என்றும் சொல்லப்படுகிறது. ஏழாம் நூற்றாண்டில் இந்தியாவுக்கு வந்த சீனப்பயணி யுவான் சுவாங்கூட காந்தார மண்ணில் (என்றால் ஆப்கனிஸ்தான். மகாபாரத சகுனி முதல் இன்றைய ஹமீத் கர்சாய் வரையிலான ஆட்சியாளர்களைக் கண்ட தேசம்.) சிம்மபுர ராஜ்ஜியம் இருந்ததாகக் குறிப்பிட்டிருக்கிறார்.

கிறிஸ்துவுக்கு முந்தைய காலகட்டத்துக்குத் துல்லியமான வரலாற்றுக் குறிப்புகள் கிடைப்பது ரொம்பக் கஷ்டம். என்ன ஆனாலும் விஜயன் இங்கிருந்து புறப்பட்டுத்தான் இலங்கைக்குப் போயிருக்கிறான் என்பது வரை சந்தேகமில்லை.

அப்படி அவன் இலங்கைக்குப் போய் இறங்கியபோது அங்கே யார் இருந்தார்கள்?
இதில்தான் ஆரம்பிக்கிறது விஷயம்.

விஜயன், இலங்கையின் முதல் மன்னன். அதில் சந்தேகமில்லை. இளவரசனாக இருந்தபோது அழிச்சாட்டியங்கள் செய்து அடித்துத் துரத்தப்பட்டாலும், அங்கே போய் ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக்கொண்ட பிறகு, (அதற்கும் சில கதைகள் இருக்கின்றன. முதலில் ஒரு யட்சியைத் திருமணம் செய்துகொள்கிறான். பிறகு சங்க காலப் பாண்டிய இளவரசி ஒருத்தியை மதுரையிலிருந்து வரவழைத்து மணக்கிறான். யட்சர்களைக் கொன்று கடாசிவிட்டு ஆட்சிப் பீடத்தில் ஏறுகிறான்.) ஒரு மாதிரி நல்ல மன்னனாகத்தான் இறுதிவரை இருந்திருக்கிறான்.

சிங்க தாத்தாவைக் கொன்ற அவனது தந்தையை ஊரில் சிகலா என்று மக்கள் அழைத்துக்கொண்டிருந்தார்கள். அதே பெயரை அவன் தனக்கும் தன்னுடன் வந்த எழுநூறு வீரர்களுக்கும் அடையாளமாக வைத்துக்கொண்டான். சிகலா இனம்தான் பின்னர் சிங்கள இனமானது என்று சொல்வார்கள்.

இன்னொரு விதமாகவும் இதனைக் குறிப்பிடுவதுண்டு. பழைய கலிங்க ராஜ்ஜியத்தின் சின்னமும் கொடியும் சிங்கம். சிங்கத்தின் பேரனான விஜயன் இலங்கைக்குப் போனபோது அங்கே இரண்டு பூர்வகுடிகள் இருந்தார்கள். வடக்கே இருந்தவர்கள் நாகர்கள். தெற்கே இருந்தவர்கள் இயக்கர்கள்.

நாகர், நாக வழிபாடு, நாகர் கோயில் எல்லாம் நம் பக்கமும் உண்டு. அதுவேதான். ஆனால், அந்த இயக்கர்கள் என்னும் ஆதி இனம், இந்தப் பக்கம் எங்கும் கிடையாது. இலங்கையில் மட்டும்தான். `எலு' என்ற ஒரு மொழியை அவர்கள் பேசிக்கொண்டிருந்தார்கள்.

ஆக, சிங்கம் போய் எலுவுடன் ஐக்கியமாகிறது. சிங்களம் பிறக்கிறது. போதுமா?

மகா வம்சம் என்னும் இலங்கையின் ஆதி வரலாறைச் சொல்லும் நூல், தனியொரு மனிதரால் எழுதப்பட்டதல்ல. பவுத்தம் இலங்கையில் பரவிய காலத்துக்குப் பிறகு, பல்வேறு காலகட்டங்களில் பல்வேறு புத்த பிக்குகளால் வாய் வழியாகவும் நாள் குறிப்பு வடிவிலும் சொல்லி, எழுதி வைக்கப்பட்ட பல கதைகளை கி.பி. ஐந்தாம் நூற்றாண்டில் மகாநாம தேரா என்கிற புத்த பிக்கு தொகுக்கிறார். வெறுமனே தொகுக்காமல், பிரதிக்கு அவரே ஒரு எடிட்டராகவும் இருந்திருக்கிறார். ஆதிகால புத்த பிக்குகள் எழுதி வைத்ததெல்லாம் ஒரே வழவழா. சொன்னதையே திரும்பத் திரும்பச் சொல்கிறார்கள். நான் கொஞ்சம் வெட்டி ஒட்டி சரி பண்ணித் தருகிறேன் என்று ஒரு முன்குறிப்பும் கொடுக்கிறார்.

அதன்படி பிஹாரிலிருந்து பவுத்தமும் ஒரிஸ்ஸாவிலிருந்து விஜயனும் புறப்பட்டு இலங்கையைத் தொடுகிறார்கள். புத்தரே ஒரு நடை இலங்கைக்குச் சென்று வந்ததாகக் கூட ஒரு கதை உண்டு. கதைதான். ஆதாரங்கள் ஏதும் கிடையாது.
இலங்கையின் ஆரிய ஊடுருவல் இவ்வாறாக அமைந்ததாக சரித்திரம் சொல்கிறது.

ஆரியம் ஒன்று இருந்தால் முன்னதாக அங்கே திராவிடம் இருந்தாக வேண்டுமல்லவா? முன்னர் சொன்ன நாகர் இனத்தவர்கள்தான் அவர்கள். தமிழ் பேசும் மக்கள். வட இலங்கை முழுதும் பரவி வசித்தவர்கள்.

விஜயன் கூட முற்று முழுதான தெற்குப் பக்கத்திலேயே செட்டில் ஆனதாகத் தெரியவில்லை. நடுவே மலைப்பகுதியில் கடம்ப நதியோரம் தோற்றுவிக்கப்பட்ட `அனுராதகாமம்' என்கிற இன்றைய அனுராதபுரம்தான் இலங்கையில் முறைப்படி அமைக்கப்பட்ட முதல் குடியிருப்புப் பகுதி. அதற்கு வடக்கே உபதிஸ்ஸகாமம் என்று இன்னொரு குடியிருப்பு அடுத்தபடியாக. இந்த `காமம்' ஒன்றுமில்லை. கிராமம் என்று இன்று நாம் சொல்வதன் அன்றைய வழக்கு. அவ்வளவே.

இந்த மாதிரி இன்னும் சில வசிப்பிடங்களை ஏற்படுத்திக்கொண்டு விஜயன் ஆட்சியில் அமர்ந்தான். அவனுக்குப் பின்னால் அடுத்த கப்பல்களில் வந்த பெண்டுபிள்ளைகள் இறங்கிய தீவுகள், அங்கே அவர்களது நிலைமை பற்றியெல்லாம் மகா வம்சம் பெரிதாகக் கவலைப்படவில்லை. விஜயனே கவலைப்படாமல் அடுத்த திருமணங்களில் தீவிரமாகிவிட்ட பிறகு, மகா வம்சம் என்ன செய்யும்?

ஆக, கிடைத்திருக்கும் ஆதாரங்களின் அடிப்படையில் விஜயனும் அவனது எழுநூறு ஆதரவாளர்களும் இலங்கையின் ஆதி குடிகளுள் ஒருவரான இயக்கர் இனப் பெண்களுடன் இணைந்து உருவாக்கிய சந்ததியே இன்றைய சிங்கள இனத்தவர்.

அந்த வகையில், இன்றைய இலங்கைப் பிரச்னை என்பது ஆதியில் தோன்றிய பாதி ஒரிஸ்ஸாக்காரர்களின் சந்ததியினருக்கும் மீதி இடங்களில் வாழ்ந்துகொண்டிருந்த முழுத் தமிழர்களுக்குமானதாகிறது.

பா.ராகவன்
நன்றி:குமுதம்

(தொடரும்)

இதுக்கப்புறமும் யாராவது ஆஸ்கார் பற்றி பேச ஆசைப்படறிங்களா ?

சிலநாள் முன்பு நண்பர் ஒருவரை பார்ப்பதற்காக மயிலாப்பூர் வரை சென்றிருந்தேன். நகரில் தேசிய முற்போக்கு திராவிடர் கழகத்தின் இளைஞர் அணி மாநாடு நடப்பதால் வெளியூரில் இருந்து பஸ், லாரி, வேன், கார், பைக், சைக்கிள், கால்நடை என பல ரூபத்திலும் கட்சியின் இளைஞர்(?) அணியினர் தீவுத்திடலை நோக்கி படையெடுத்த வண்ணமிருந்தனர். இதனால் சனிக்கிழமை வழக்கத்தைவிட கூடுதலான போக்குவரத்து நெரிசலில் நான் சென்ற பேருந்தும் சிக்கிக்கொண்டது. ஜன்னலோர சீட் கிடைத்த சந்தோஷத்தில் சுவாரசியமாக வேடிக்கை பார்த்துக்கொண்டே செல்ல ஆரம்பித்தேன்.



மாநாட்டையொட்டி நகரில் ஆங்காங்கே தலைவர் அழைக்கிறார் பாணியில் விளம்பர பேனர்கள். இந்த மாதிரி விளம்பர பேனர்களில் காணப்படும் அரசியல் தலைவருக்கான சிறப்பு பட்டங்கள் சமயத்தில் சூடான பஜ்ஜி வைத்து சாப்பிடும் 3 நாளைக்கு முந்தைய தினத்தந்தியில் வரும் கள்ளக்காதல் விவகாரங்களை விடவும் வெகு சுவாரசியமாக இருக்கும். இன்றும் போக்குவரத்து நெரிசலில் 100 அடிகளுக்கு ஒருமுறை தயங்கி தயங்கி நின்று சென்ற பேருந்தில் நேரத்தை ஓட்டுவதற்கு வேறு வழியிலாமல் ஆங்காங்கே வைக்கப்பட்டிருந்த விளம்பர பேனர்களை படிக்க ஆரம்பித்தேன்.

யான் பெற்ற துன்பம் பெறுக இவ்வையகம் என்ற வலையுலக பழமொழிக்கேற்ப அந்த பொன்மொழிகள் உங்கள் பார்வைக்கும்.

புரட்சி கலைஞர் அழைக்கிறார்
(நோ கமெண்ட்ஸ்)

இருண்ட தமிழகத்தின் ஒளிவிளக்கே

(அப்போ சாலிகிராமம் மக்கள் கலைஞர் ஆட்சியோட கரண்ட் கட் பத்தி ஃபீல் பண்ணவே மாட்டாங்க)

வருங்கால தமிழகத்தின் விடிவெள்ளியே.
(அட!!!!!!!)

வருங்கால காமராஜர் அழைக்கிறார்.
(அடப்பாவமே அவரையும் விட்டு வைக்கலையா?)

வருங்கால முதல்வர் அழைக்கிறார்.
(ஒரு சீட்டுதானே இருக்கு. அதுக்கு எத்தனை பேருப்பா?)

கருப்பு எம்.ஜி.ஆர் அழைக்கிறார்.

(நல்லவேளை எம்.ஜி.ஆர் அப்பவே போயிட்டாரு)

பகுத்தறிவு பல்கலைக்கழகமே!!!!!

(அடக்கொடுமையே...)

தமிழகத்தின் நிரந்தர முதல்வர் அழைக்கிறார்
(முதலில் ஒருமுறை முதல்வர் ஆகுங்க. நிரந்தரம் பத்தி அப்புறம் பேசலாம்)

தமிழினத்தின் காவலனே..

(ஸ்ஸ்ஸ்ஸ்...ப்ப்பா...)

மாவட்டம்தோறும் இலவசமாக
கம்ப்யூட்டர் தந்த தமிழகத்தின் பில்கேட்ஸ் அழைக்கிறார்.
(நல்லவேளை பில்கேட்ஸீக்கு தமிழ் தெரியாது)

இவ்வளவு கொடுமையையும் என் ரெண்டு கண்ணால் பார்த்ததில் கொஞ்சநேரத்துக்கு கண்ணெல்லாம் கலங்கி பார்வைமங்கி போனதைக்கூட பொறுத்துக்கிட்டேங்க.

ஆனால் அதுக்கப்புறம் கடைசியாக என் கண்ணுக்கு ஒரு பேனர் அம்புட்டுச்சு பாருங்க..

அதிலே அவர் ரீஜண்டா நடிச்சு வந்த படத்தோட(அரசாங்கம்னு நினைக்கிறேன்) போலீஸ் கெட்டப் ஸ்டில் ஒண்ணு சும்மா ஒரு 10 அடி உயரத்துக்கு பளபளன்னு. பத்தாததுக்கு இந்த ஹெல்மெட் யூஸ் பண்ற பார்ட்டியெல்லாம் போடுவாங்களே சின்னதாக ரவுண்ட் கேப். அதுமாதிரி ஒரு கேப் போட்டுக்கிட்டு நல்லா நச்சுன்னு ஒரு போஸ் கொடுப்பாரு.
(காலையிலே அவரத்துல எந்திரிச்சு வந்து தூக்ககலக்கத்துல அந்த ஸ்டில்லை பார்த்தால் வாட்ச்மேன் மாதிரியே இருக்கும் அப்படிங்கிறது வேற விஷயம்)

அந்த ஸ்டில்லுக்கு பக்கத்திலே வழ்க்கம்போல் ஒரு பொன்மொழி..

எவ்வளவோ படிச்சுட்டோம் இதைப்படிக்க மாட்டோமான்னு கொஞ்சம் தைரியத்தை வரவழைச்சுக்கிட்டு படிக்க ஆரம்பிச்சேன்.

அது........ அது...........

"தலைவா இதற்குபிறகும் உனக்கு ஆஸ்கர் விருது கிடைக்காவிட்டால் அது ஆஸ்கார் விருதை வழங்கும் அந்த அமெரிக்க குழுவுக்குத்தான் அவமானம்"


இப்ப சொல்லுங்க இதுக்கப்புறமும் தமிழ்படம் ஏதாவது ஆஸ்கார் விருது வாங்கனும்னு ஆசைப்படறீங்களா மக்கா?


டிஸ்கி: எனக்கு எந்த அரசியல்வாதி மீதும் தனிப்பட்ட விருப்பு, வெறுப்பு கிடையாது. ஒவ்வொரு தேர்தலிலும் காலையிலேயே 1 மணிநேரம் தவறாமல் வரிசையில் நின்று வாக்களித்து மீதி இருக்கும் நாளை டிவி யின் முன் வெட்டியாய்போக்கும் சாதாரண இந்திய குடிமகன் நான்.

hi.. hi.. ஒரு மீள்பதிவு..

Tuesday, November 25, 2008

யுத்தம் சரணம் 2

யுத்தம் சரணம் 2

 
நாகரிகங்களும் அநாகரிகங்களும் பெரும்பாலும் ஆற்றங்கரைகளில்தான் தொடங்குகின்றன.

மக்கள் தம் விருப்பத்தில் சுதந்திரமாக அலைந்து திரிந்து, கூடு கட்டி, குடித்தனம் செய்து, குழந்தை பெற்று, விவசாயம் செய்து, கல்வி, கலைகள் வளர்த்து, காலத்தில் நிலைத்து நின்றால், அது நாகரிகம்.

அதே மக்களை அரசியல் உள்நோக்கங்களுடன் ஓரிடத்திலிருந்து பெயர்த்து எடுத்துக் கொண்டுபோய் இன்னோர் இடத்தில் குடியமர்த்தி மேற்கண்டவற்றையே வலுக்கட்டாயமாகச் செய்ய வைப்பது அநாகரிகம்.

நான்காவது ஈழ யுத்தம் என்று வருணிக்கப்படும் இப்போதைய யுத்தத்தின் தோற்றுவாய் இப்படியான ஓர் அநாகரிகம் செழித்த இடத்தில்தான் இருக்கிறது. அந்த ஆற்றின் பெயர் மாவிலாறு (Mavil Aru).தமிழர்கள் வாழும் கிழக்கு மாகாணத்தில் ஓடுகிற ஆறு. திருகோணமலை மாவட்டத்தில் இருக்கிற ஆறு. இந்த மாவிலாற்றுத் தண்ணீரை முன்வைத்து ஆரம்பிக்கப்பட்ட யுத்தத்துக்கு Operation Watershed என்று பெயர் வைத்தார்கள்.

சரத் ஃபொன்சேகா மீது தற்கொலைப் படைத் தாக்குதல் நிகழ்த்தப்பட்டதற்குச் சரியாக மூன்று மாதங்கள் கழித்து ஜூலை 26, 2006 அன்று ஆரம்பிக்கப்பட்டது இது. ஒரு நதி. ஓர் அணை. ஒரு பக்கம் தமிழர்கள். இன்னொரு பக்கம் குடியமர்த்தப்பட்ட சிங்கள இனத்தவர். இரு தரப்புக்கும் பொதுவான நதிநீரை ஒரு பக்கம் மட்டும் பயனடையும் வண்ணம் திறந்து விட்டிருந்தது அரசாங்கம்.

அந்தப் பகுதிக்கு `செருவில்' என்று பெயர். சிங்கள இனத்தவர் பெருமளவு வசிக்கும் பகுதி. விளைநிலங்கள் அதிகம். எனவே, நீரின் தேவையும். அதனாலென்ன? திறந்து விட்டுவிடலாமே?

வயலுக்குப் போகும் தண்ணீர், வரப்புக்குப் போகுமளவு கூட தமிழர் பகுதிக்குக் கிடைக்காமல் போனதுதான் பிரச்னையின் தொடக்கம். என்ன செய்யலாம்? அணையை மூடிவிடலாம். நீதிமான்கள் பேச வருவார்கள் அல்லவா? அப்போது கேட்கலாம். மூதூர் பகுதி நீர் வினியோகத் திட்டம் என்று ஆசிய வளர்ச்சி வங்கியின் நிதி உதவியுடன் கட்டப்பட்ட அணை நீர், அறுபதாயிரம் சிங்களர்களின் பயன்பாட்டுக்கு மட்டுமா? லட்சக்கணக்கான தமிழர்களுக்கும் சேர்த்தா?

கேட்கலாம். கேட்டுத்தான் ஆகவேண்டும். பதில் சொல்வார்கள் அல்லவா? சொல்லித்தான் தீரவேண்டும். போர் இல்லாமல் வாழ முடியாவிட்டால்கூடப் பரவாயில்லை. நீரில்லாமல் எப்படி வாழ்வது?

அணையிலிருந்து வெளியேறிக்கொண்டிருந்த நீரை நிறுத்தினார்கள் புலிகள். யாராவது பேச வருவார்கள் என்று காத்திருந்தார்கள் மக்கள். நீதிமான்கள் வரவில்லை. ராணுவம் வந்தது. நான்காம் ஈழ யுத்தம் மாவிலாறு விவகாரத்தில் தொடங்கியது.

மாவிலாறு என்பது ஒரு தொடக்கப்புள்ளி மட்டுமே. ராணுவத்தின் நோக்கம் வேறு. செயல்திட்டம் வேறு. இலக்கு முற்றிலும் வேறு. மட்டக்களப்பில் ஆரம்பித்து திருகோணமலை வழியே வவுனியா வரை உள்ள புலிகளின் அத்தனை தளங்களையும் கைப்பற்றி அழிக்கும் திட்டம் அவர்கள் வசம் இருந்தது. அப்படியே முடிந்தால் யாழ்ப்பாணம். சுற்றி வளைத்துக் கிளிநொச்சி. நிறுத்தப் போவதில்லை. என்ன ஆனாலும் சரி. போர் நிறுத்த ஒப்பந்தப் பத்திரம், பத்திரமாக இருக்கிறது. இன்னும் கிழித்துப் போடவில்லை. யார் கேட்கப்போகிறார்கள்?

சடாரென்று விமானப்படையைக் களத்தில் இறக்கினார்கள். யாரும் எதிர்பார்க்கவில்லை.

மாவிலாற்றுப் படுகை என்பது மூன்று தரப்பு மக்கள் வாழும் பிரதேசம். தமிழர்கள். தமிழ்தான் பேசுவார்கள் என்றாலும் முஸ்லிம்கள். அப்புறம் சிங்களர்கள். முழு நீள யுத்தம் என்றால் நிச்சயமாக பாதிப்பு எல்லோருக்கும் பொதுவானதே. ஆயினும் பிரச்னையில்லை. லவுட் ஸ்பீக்கர் வைத்து அறிவித்துக்கொண்டிருக்கிறார்கள். பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு நகர்ந்துவிடலாமே?

ராஜபக்ஷே அந்த ஜூலை மாதத்தை யுத்தத்துக்குத் தேர்ந்தெடுத்ததற்குப் பல ராஜதந்திரக் காரணங்கள் உண்டு. தலையைச் சுற்றி மூக்கைத் தொடும் காரணங்கள் போல் தெரிந்தாலும், முக்கியமானவை. தவிரவும் மிகத் தீவிரமானவை. பிரதானமாக, சர்வதேச கவனத்தைச் சற்றுக் காலம் கடத்திப் பெறுவதற்கான சரியான, திட்டமிட்ட முயற்சி.

அடிக்க ஆரம்பித்த உடனேயே யாரும் `ஐயோ அம்மா' என்று அலற முடியாத சூழல். குறிப்பாக அமெரிக்காவில். கனடாவில். அப்புறம் தமிழ் நாட்டில்.

அந்த 2006-ம் ஆண்டு மத்தியில் உலக அளவில் பல முக்கியமான சம்பவங்கள் நடைபெற்றன. மே மாதம்தான் கனடாவும் ஐரோப்பிய யூனியனும் விடுதலைப் புலிகளைத் தடை செய்து அறிவித்திருந்தன. இது புலிகள் தரப்பில் மிகுந்த அதிர்ச்சியையும் ஏமாற்றத்தையும் ஏற்படுத்தியிருந்தது. மனத்தளவில் சற்றே தளர்ச்சியுற்றிருக்கக்கூடும். ஆனால், இதற்கெல்லாம் உடைந்துவிடக் கூடியவர்களல்லர் என்பது ராஜபக்ஷேவுக்குத் தெரியும். ஆயினும் புலிகளுக்கான பணம் வரும் பாதை முன்னைப் போல் அத்தனை சுதந்திரமாக இனி திறந்திருக்காது என்று அவர் கருதினார்.

தவிரவும் யுத்தத்தை இப்போது ஆரம்பித்தால் அது மேற்குலகின் கவனத்தைக் கவரச் சற்று சமயம் பிடிக்கும். ஏனென்றால், அதே ஜூலையில்தான் லெபனான் _ இஸ்ரேல் யுத்தம் அதன் உச்சகட்டத்தைத் தொட ஆரம்பித்திருந்தது. ஹிஸ்புல்லாவுக்கும் இஸ்ரேலிய அரசுக்குமான யுத்தம். அமெரிக்க அரசும் அமெரிக்க ஆதரவு ஐரோப்பிய அரசுகளும் கனடாவும் மிகத் தீவிரமாக இஸ்ரேலுக்கு எந்தெந்த வகையிலெல்லாம் உதவலாம் என்று யோசித்து, செயல்படுத்திக்கொண்டிருந்தார்கள். இப்போது மாவிலாறில் ஒரு யுத்தத்தைத் தொடங்கினால் சட்டென்று கவனம் கலைத்து இங்கே யாரும் திரும்ப மாட்டார்கள். போர் நிறுத்தத்துக்கும் அமைதிப் பேச்சுவார்த்தைகளுக்கும் முன்னின்று ஏற்பாடு செய்த புண்ணியாத்மாக்கள்தான் என்றாலும், இஸ்ரேல் முக்கியம் அவர்களுக்கு. இலங்கையெல்லாம் மற்றும் பலர் பட்டியலில் வருகிற தேசம்.

ஐரோப்பிய யூனியன் தன் மீது விதித்த தடையைச் சுட்டிக்காட்டி, அமைதித் திட்டத்தின் அங்கத்தினர்களாக இருந்த ஐரோப்பிய தேசங்களான ஸ்வீடன், டென்மார்க், ஃபின்லாந்து, நார்வே ஆகிய தேசங்களை `யூனியனிலிருந்து விலகுங்கள்' என்று விடுதலைப் புலிகள் கேட்டுக்கொண்டிருந்தார்கள்.

ம்ஹும். சாத்தியமில்லை. டென்மார்க்கும் ஃபின்லாந்தும் செப்டம்பர் 1 முதல் அமைதித் திட்டத்திலிருந்து விடைபெறுவதாகச் சொல்லிவிட்டன. ஸ்வீடனும் ஒத்து வருகிறபடியாக இல்லை. வடக்கு கிழக்கு மாகாணங்கள் தமிழர் பகுதிகள்தான் என்றாலும் ஓர் அணையை மூடி வைப்பது, திறந்து விடுவது போன்ற காரியங்களை அவர்கள் செய்யக்கூடாது என்று இந்த தேசங்களின் இலங்கைப் பிரதிநிதிகள் கருத்துச் சொன்னார்கள். நார்வே மட்டும்தான் தொடர்ந்து அமைதி, அமைதி என்று அலறிக்கொண்டிருந்தது.

ஒன்றும் பயனில்லை. இலங்கை விமானப்படை விமானத்திலிருந்து முதல் குண்டு வந்து விழுந்ததிலிருந்து மொத்தமாகச் சுமார் இருநூறு பேரை பலி கொண்டு, ஐம்பதாயிரம் பேரை அகதிகளாக ஊரை விட்டுத் துரத்திவிட்டு, அணையைத் திறந்துவிட்டார்கள்.

விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை அரசுக்கும் இடையே யுத்தம் என்று நடைபெறத் தொடங்கிய நாளாக வெற்றியும் தோல்வியும் இரு தரப்புக்கும் மாறி மாறித்தான் இதுவரை வந்திருக்கிறது. நிகரற்ற ஆள் பலம், ஆயுத பலங்கள், மத்தியக் கிழக்கு தேசங்கள் மாதிரி தொட்டதற்கெல்லாம் நாட்டாமைக்கு அமெரிக்கா வந்து உட்காராத வசதி, இந்தியாவின் நிரந்தர மறைமுக ஆதரவு எல்லாம் இலங்கை அரசுக்கு உண்டு.

புலிகளைப் பொறுத்தவரை சர்வதேசத் தமிழர்களின் அனுதாபம் கலந்த ஆதரவு என்பதைத் தவிர பிரமாதமான வசதிகள் ஏதும் கிடையாது. ஒசாமா பின்லேடனின் அமெரிக்கத் திருவிளையாடல்களுக்குப் பிறகு ஆயுதம் வாங்குகிற விஷயம்கூட அவர்களுக்கு அத்தனை எளிதானதல்ல. ஆனால் இதுவல்ல. எதுவுமே அவர்களுக்கு எப்போதும் ஒரு பொருட்டாக இருந்ததில்லை. ஆதியில் திலீபன் தொடங்கி நேற்றைக்கு பாலசிங்கம், தமிழ்ச்செல்வன் வரை எத்தனை மூளைகள், எத்தனை வீரர்களை இழந்தாலும் சிலிர்த்துக்கொண்டு திரும்ப எழுந்து வந்துவிடுவார்கள். ஒரு தோல்வியை அடுத்த வெற்றியில் கழுவித் துடைத்துவிடுவார்கள்.

ஆனால், மாவிலாறில் தொடங்கி நேற்றைக்குக் கிளிநொச்சிக்கு அருகே பூநகரி வரை இலங்கை ராணுவம் முன்னேறி வந்துவிட்டது. மட்டக்களப்பு. திருகோணமலை. முல்லைத்தீவு. யாழ்ப்பாணம். வவுனியா. மன்னார். பூமியின் சுற்றுக்கு எதிராக ஒரு சுற்று. கிழக்கிலிருந்து வடக்கைத் தொட்டு வடமேற்கு. எங்கும் இலங்கை ராணுவம்.

பூநகரியைப் பிடிக்க முடிந்தது மிகப்பெரிய விஷயம். அது புலிகளின் வலுவான கோட்டை. யாழ்ப்பாணத்தைச் சாலை வழியில் பிடிப்பதற்கு மிகப்பெரிய வாசல்.

எனவேதான் வெற்றிக்கூச்சல் விண்ணைத் தொடுகிறது. `நீ முதலில் ஆயுதங்களைக் கீழே போடு, அப்புறம் பேச்சுவார்த்தை குறித்துச் சிந்திக்கலாம்' என்று விரல் நீட்டிப் பேச முடிகிறது. எவ்வித நிபந்தனைகளுக்கும் தயாரில்லை என்று காதைப் பொத்திக்கொள்ள வைக்கிறது. ஜெயிக்கப் போகிறோம், எதற்கு சமாதானம் என்று சிந்திக்கச் சொல்கிறது.

ஒரு விஷயம். ஜெயிப்பது அத்தனை சுலபமல்ல. ஒதுங்க ஓரடி நிலமில்லாமல் வவுனியா காடுகளில் ஓடியபடியே வளர்ந்த இயக்கம் அது. மண்ணைப் பிடித்ததல்ல, அங்குள்ள தமிழர்களின் மனதைப் பிடித்ததுதான் விடுதலைப் புலிகளின் ஒரே பெரிய பலம். நிறைய தவறுகள் செய்தார்கள். தடுமாற்றங்கள் ஏராளம். பல கொலைகள். பல சறுக்கல்கள். அழித்தொழிப்புகள்.

ஆனால் இன்றைக்கு வரை தனது இலக்கில் எந்த மாற்றமும் இல்லாத ஒரே இலங்கைத் தமிழ் இயக்கமாக இருக்கிறபடியால் கிடைத்த அங்கீகாரம் அது. 1948_ல் இலங்கை சுதந்திரம் அடைந்தது முதல் எந்த அரசியல் கட்சியோ, இயக்கமோ அங்கே கொள்கைத் திருத்தம் செய்யாது இருந்ததில்லை. கோஷங்களில் மாறுதல்கள் இல்லாமலில்லை. இந்தப் பக்கமா, அந்தப் பக்கமா என்று ஊசலாடாமல் இருந்ததில்லை.

இலங்கை என்ன? உலகில் எந்தத் தேசத்தை, எந்தக் கட்சியை, எந்த இயக்கத்தை எடுத்துக்கொண்டாலும் இதுதான் நிலைமை. காலம், சூழ்நிலை, தேவை, அவசியம் கருதி கொள்கைகளில் சிறு திருத்தங்கள் மேற்கொள்வது தவிர்க்க முடியாததாகவே இருந்திருக்கிறது. கம்யூனிசக் கோட்டையான சீனா இன்றைக்கு அந்நிய முதலீடுகளில் ஆர்வம் செலுத்துகிறது. புதிய அமெரிக்க அதிபருக்கு ஃபிடல் காஸ்ட்ரோ வாழ்த்துச் சொல்கிறார். நேபாள மாவோயிஸ்டுகள் ஆட்சி மட்டத்தில் கொள்கைகளிலிருந்து சற்றே விலகியிரும் பிள்ளாய் என்று தமக்குத்தாமே புதிய விதிகளை எழுதிக்கொள்கிறார்கள். ஹமாஸ் தலைவர்கள் சர்வசாதாரணமாக இஸ்ரேல் அரசுடன் பேச்சுவார்த்தைகளுக்குப் போகிறார்கள். ஒசாமா பின்லேடனுக்குக் கூட, தன்னிலை விளக்கம் அளிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுவிடுகிறது. வாழ்க்கை வரலாறு எழுதத் தோன்றுகிறது.

தனி ஈழம் என்கிற ஒற்றை இலக்கிலிருந்து இன்றுவரை ஓரங்குலம் கூட நகராதவர்களாக விடுதலைப் புலிகள் மட்டுமே இருக்கிறார்கள்.

தனி ஈழம். புலிகளுக்கு முன்னாலும் சிலர் பேசியிருக்கிறார்கள். புலிகளின் சமகாலத்தைச் சேர்ந்த வேறு பல இயக்கத்தவர்களும் பேசியிருக்கிறார்கள். ஒரு கனவாக அதனை முன்வைக்கத் தெரிந்த யாருக்கும், நனவாக்க செயல்திட்டம் வகுக்கத் தெரியவில்லை.

ஆனால், எழுபதுகளின் பிற்பகுதியில் ஆயுதப் போராட்டம் ஒன்றைத் தவிர, தமிழர்கள் தப்பிக்க வேறு வழியில்லை என்கிற முடிவுக்கு வருவதில் அங்கே யாருக்கும் அபிப்பிராய பேதம் இல்லை. ஜனநாயக வழியில் போராடலாம், காந்தியைப் பார், நேருவைப் பார் என்று இந்தப் பக்கம் விரல் நீட்டியவர்கள் எல்லாம் கூட அடங்கி ஒடுங்கி அமர்ந்து விட்டார்கள். யார் குத்தியாவது அரிசி வெந்தால் சரி என்று கண்ணை மூடிக்கொண்டிருக்கக் கற்றுக்கொண்டுவிட்டார்கள்.

உலகம் முழுதும் ஆயிரம் விதமான வாதங்கள், விவாதங்கள், விமர்சனங்கள். சுயாட்சி, தன்னாட்சி, அதிகாரப் பகிர்வு அழகழகான பேச்சுகள்.

உண்மை மிக எளிமையானது. அதே சமயம் மிகத் தீவிரமானதும்கூட. நாள், தேதி, வருடம் குறிப்பிடக்கூடிய அளவுக்கான சரித்திரத்தின் முதல் பக்கத்திலிருந்து அங்கே தமிழர்கள் அவஸ்தைப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள் என்பதைத் தவிர வேறு எதுவும் முக்கியமல்ல.

(தொடரும்)
 

 

யுத்தம் சரணம் தொடர் நண்பர்களுக்காக.


எழுத்தாளர் பா.ராகவன் ஈழப்பிரச்னை குறித்து குமுதம் ரிப்போர்ட்டரில் எழுத ஆரம்பித்திருக்கும் யுத்தம் சரணம் நமது நண்பர்களுக்காக இங்கே ஒவ்வொரு வாரமும்.


யுத்தம் சரணம் ! - 1 ஒரு காரின் கதை. 
 
 
 
முதலில் படத்தைப் பாருங்கள். நன்றாக, உற்றுப் பாருங்கள். நசுங்கிய நிலையில் இருக்கும் டயர்களைப் பாருங்கள். பிறகு, நூற்றுக்கணக்கான பொத்தல்களுக்கும் சிராய்ப்புகளுக்கும் உள்ளாகியிருக்கும் அதன் உடல் பகுதி. எந்தக் கணமும் உதிரலாம் என்னும்படியாக, கசக்கி, விரித்து உதறிய பாலிதீன் தாள் போலிருக்கும் முன்புறக் கண்ணாடி வரை பார்த்துவிட்டீர்களா? மிகவும் கவனம். காரின் முன் சீட்டின் ஓரத்தில் ரத்தம் தெரிகிறதா? புகைப்படத்தில் தெரியவில்லை என்றாலும் பின் சீட்டில் இதனைக் காட்டிலும் ஏராளமான ரத்தம்.இது மட்டும் புல்லட் ப்ரூஃப் செய்யப்பட்ட லிமோஸினாக இல்லாமல், வேறு ஏதேனுமொரு சாதாரண காராக இருந்திருக்கும் பட்சத்தில், புகைப்படத்தில் கார் நிற்கும் இடத்தில் நீங்கள் ஒரு தகரக் குவியலைத்தான் பார்த்திருப்பீர்கள்.

இது ஒரு மனித வெடிகுண்டுத் தாக்குதலின் எச்சம். லெஃப்டினண்ட் ஜெனரல் சரத் ஃபொன்சேகா (Sarath Fonseka) தப்பித்தது தற்செயல். கண்டிப்பாக உயிர் போய்விடும் என்றுதான் எல்லோரும் நினைத்தார்கள். அப்படியொரு நிலைமையில்தான் அவரை ராணுவ மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றார்கள். ஏனென்றால், தாக்குதல் நடந்த இடத்தில், அந்தக் கணமே எட்டு ராணுவ அதிகாரிகள் பலியாகிவிட்டார்கள். இருபத்தேழு பேர் பாதி உயிருடன் கிடந்தார்கள். யாரும் பிழைக்கக்கூடும் என்று யாருக்கும் நம்பிக்கை இல்லை.

தப்பித்தது தற்செயல். அதுவும் ஃபொன்சேகா. அவரைக் குறி வைத்து நிகழ்த்தப்பட்ட தாக்குதல்தான் அது. 2006 ஏப்ரல் மாதம் 25-ம் தேதி, செவ்வாய்க்கிழமை. அன்றைக்குத் தொலைக்காட்சியில் என்னவோ முக்கிய உரை ஆற்றப்போவதாக அதிபர் ராஜபக்ஷே சொல்லியிருந்தார். என்னவாக இருக்கும்? போர் நிறுத்தம் அமலில் இருந்த சமயம். நார்வே தூதுக்குழுவினர் நம்பிக்கைக்கும் அவநம்பிக்கைக்குமிடையே நடைபோட்டுக் கொண்டிருந்தார்கள். எங்காவது, ஏதாவது ஒரு புள்ளியில் சமரசத்துக்கான இழையைப் பிடித்துவிடும் நோக்கத்தில் இருந்தவர்கள் அவர்கள். முன் அனுபவம் உண்டு. விடாக்கண்டர் யாசிர் அராஃபத்தையும் கொடாக்கண்டர் இட்ஸாக் ராபினையுமே இழுத்துப் பிடித்து உட்கார வைத்து முன்னதாக ஓஸ்லோ ஒப்பந்தத்துக்கு வழி வகுத்தவர்கள். பாலஸ்தீன் விஷயத்தில் சாதிக்க முடிந்ததை இலங்கை விஷயத்திலும் சாதித்துக் காட்டிவிட்டால் உலகம் தொப்பியைக் கழற்றி வணக்கம் சொல்லும்.
 
சண்டை போடுவதைக் காட்டிலும் சிரமமானது சமாதானம் செய்வது. பேச்சு ஒன்றுதான் ஆயுதம்.வக்கணை அவசியம். வாய்ஜாலம் இன்றியமையாதது. எல்லாவற்றைக் காட்டிலும் முக்கியம், அடித்துக்கொள்ளும் இரு தரப்புக்கும் நம்பிக்கை ஏற்படுத்துவது. அதற்கு உள்ளார்ந்த அக்கறையும் ஈடுபாடும் தேவை.
நார்வே அதைத்தான் செய்துகொண்டிருந்தது.

2002-ல் இலங்கை அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையே போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டது. 2004 ஜூலைக்குப் பிறகு நார்வே சமாதானக் குழுவின் நடவடிக்கைகள் சூடு பிடிக்க, இடைப்பட்ட காலத்தில் இதனைக் காட்டிலும் பெரிய சம்பவம் ஏதும் அங்கே நடக்கவில்லை. இதுதான். இது மட்டும்தான். போதாதா?

கொழும்புவில் உள்ள ராணுவத் தலைமையகத்தில் அன்றைக்கு வழக்கம்போல் காலை வந்து வேலைகளைப் பார்த்துக்கொண்டிருந்தார் ஃபொன்சேகா. ஒரு மணிக்கு அதிபரிடமிருந்து தொலைபேசி அழைப்பு வந்தது. அநேகமாக மாலை ஆற்றவிருக்கும் தொலைக்காட்சி உரை தொடர்பாக ஏதோ பேசிவிட்டு சாப்பிடப் புறப்பட்டார்.

அதிபர் மகிந்த ராஜபக்ஷேவுக்கும் அவருக்குமான உறவு, வெறும் அதிபர்  - ராணுவத் தளபதி உறவல்ல. மேலே. ரொம்ப மேலே. ரத்த உறவுகளுக்கெல்லாம் மேம்பட்ட நட்புறவு அவர்களுடையது. கருத்து வித்தியாசங்களே வராத அளவுக்கு ஒரே மாதிரி சிந்திக்கக்கூடியவர்கள் இருவரும். நோக்கம் தெளிவானது. புலிகளை ஒழித்துவிடலாம். சிம்பிள்.

எனில் பேச்சுவார்த்தை, அரசியல் தீர்வு, போர் நிறுத்தம், சமாதான உடன்படிக்கை?

 
அதெல்லாம் இல்லாமலா? அவசியம் இருக்கும். அதிலென்ன சந்தேகம். ஆனால் நோக்கம் ஒன்றுதான். புலிகள் கூடாது. பிரபாகரன் கூடாது. தனி ஈழம் கூடாது. தமிழர்களும் கூடாது.

இன்றைக்குப் புதுடெல்லியில் வந்து உட்கார்ந்துகொண்டு ஈழத் தமிழர்களின் பாதுகாப்புக்கு முழு உத்தரவாதம் தருகிறேன் என்று அவர் சொல்லிவிட்டுப் போனதை நல்லதொரு நகைச்சுவை என்றுதான் எடுத்துக்கொள்ள வேண்டும். தப்பித்தவறியும் சந்தேகப்பட்டுவிடக் கூடாத ஜீவாத்மா அவர். ஒன்றும் செய்வதற்கில்லை. வந்த வழி அப்படி. பார்த்துப் பயின்ற சரித்திரம் அப்படி.

அவசரமில்லை. அதையெல்லாம் பின்னால் பார்க்கலாம். இப்போது மதிய உணவுக்குப் புறப்பட்ட ஃபொன்சேகா.

கொழும்பு ராணுவத் தலைமையகம் என்பது மிகப்பெரிய வளாகம். கிட்டத்தட்ட ஒரு கிராமம் அளவுக்கு விரிந்து பரந்த பிராந்தியம். அருகிலேயே ராணுவ அமைச்சகம் இருக்கிறது. சற்றுத்தள்ளி கூட்டு ராணுவப் படையின் தலைமை மையம். ஒரு ராணுவ ஆஸ்பத்திரி. அதிகாரிகளுக்கும் ஜவான்களுக்குமான மெஸ். மிகப்பெரிய மைதானம்.

வெளியாள் யாரும் அத்தனை சுலபத்தில் அந்தப் பகுதிக்குள் நுழைந்துவிட முடியாது. பலமான பாதுகாப்பு. பல அடுக்குப் பாதுகாப்பு. துப்புரவாக ஆள் அடையாளம் பார்த்து, விசாரிக்காமல் யாரையும் உள்ளே விடமாட்டார்கள்.

ஆனால் அன்றைக்குச் சற்று ஏமாந்தார்கள். ராணுவ ஆஸ்பத்திரியில் அன்றைக்கு கர்ப்பவதிகளுக்கான சிறப்புப் பரிசோதனை முகாம் என்று அறிவித்திருந்தார்கள். ராணுவ ஜவான்களின் குடும்பத்தினர், உறவினர், நண்பர்கள் யார் வேண்டுமானாலும் வந்து இலவச செக்கப் செய்துகொள்ளலாம். கர்ப்பம் தரித்தவராக இருக்கவேண்டும். அவ்வளவுதான்.
 
எனவே அந்தப் பெண், ஒரு கர்ப்பிணி வேஷம் எடுத்துக்கொண்டார். நிறைமாதம். நடக்கமுடியாத நடை. முகத்தில் களைப்பு. எண்ணெய் காணாத தலை.

காலை முதல் அம்மாதிரி பல  கர்ப்பிணிகளை நிறுத்தி விசாரித்த செக்யூரிட்டி ஆட்கள், பசிவேலை வந்தபோது சற்றே அசந்து போனார்கள்.`யாரம்மா? எதற்கு வந்தாய்? செக்கப்பா? அதோ பார், அதுதான் ஆஸ்பத்திரி. வாசலில் சீட்டு எழுதி வாங்கிக்கொள். உள்ளே போய் வரிசையில் உட்கார்.'
அனுப்பிவிட்டார்கள். கேட்டிருக்கலாம். `நீ யாருடைய உறவுக்காரப் பெண்? அடையாள அட்டை எங்கே?'

அந்தப் பெண் தயாராகத்தான் வந்திருந்தாள். ஒரு போலி அடையாள அட்டை அவள் வசமிருந்தது. அதையும் மீறிப் பிரச்னை வந்தாலும் சமாளிப்பது ஒன்றும் சிரமமில்லை. உயிருக்குத் துணிந்துவிட்ட பிறகு கையகல அட்டை ஒரு விஷயமா?

சரியாக ஒன்றரைக்கு தளபதி சரத் ஃபொன்சேகா தன் அலுவலகத்திலிருந்து புறப்பட்டார்.

எவர்சில்வர் நிற லிமோஸின் கார். முன்னும் பின்னும் பாதுகாப்புக்கு பைக்கில் நான்கு ஜவான்கள். ஆயுதமேந்திய மெய்க்காப்பாளர்கள். வேறு வழியில்லை. சாப்பிடப் போகும்போதுகூட சண்டைக்குப் போகும் ஆயத்தங்களுடன்தான் கிளம்பியாகவேண்டும். சூழ்நிலை அப்படி. போர் நிறுத்தக் காலம் என்பது பூவுலகத்துக்கான அறிவிப்பு. தீவுலகத்தில் போர் நிறுத்தம் என்றால் அடுத்த போருக்கான ஆயத்தம் என்று பொருள்.
ஃபொன்சேகா தனது அலுவலகத்திலிருந்து புறப்பட்டு, ராணுவ ஆஸ்பத்திரி வளாகத்தைக் கடக்கிற வினாடியைத்தான் அந்தப் பெண் உத்தேசித்திருந்தாள்.

பாய்ந்துவிட வேண்டும்.

தளபதியின் காருக்கு முன்னால் வரும் இரண்டு மோட்டார் சைக்கிள் வீரர்கள்தான் பிரச்னை. சமாளித்து குறுக்கே புகுந்துவிட்டால் விஷயம் முடிந்துவிடும். யாரும் எதிர்பார்த்திராத வேளை, எதிர்பார்க்கவே முடியாத இடம் என்பதால் வாய்ப்புகளின் சதவிகிதம் அதிகம்.

அவள் காத்திருந்தாள். கார் வந்தது. வேகம் குறையாத கார்.

கண்ணிமைக்கும் நேரத்தில் அந்தப் பெண் சாலையில் பாய்ந்தாள். ஒரு கணம் இருக்குமா? அதை விடக் குறைவான நேரம். ஃபொன்சேகாவின் காருக்கு இடப்புறம் முன்னே வந்த மோட்டார் சைக்கிள் ஜவானுக்கு ஏதோ அசம்பாவிதம் என்று உள்ளுணர்வு சொன்னது. அதே கணம்தான். வண்டி ஓட்டிக்கொண்டிருந்த வேகத்திலேயே, குறுக்கே பாய்ந்து வரும் அந்தப் பெண்ணை நோக்கித் தன் இடது காலைத் தூக்கி உதைத்தார்.
அவள் வெடித்தாள். அது வெடித்தது.
 
இன்னும் ஓரடி அந்தப் பெண் முன்னால் வந்திருப்பாளேயானால் ஃபொன்சேகா தப்பித்திருக்க முடியாது. தூக்கி எறியப்பட்ட காரின் முன் சீட்டில் இருந்த மெய்க்காப்பாளர் இறந்தார்.

உடன் வந்த ஜவான்கள் இறந்து போனார்கள். அருகே இருந்த மேலும் சிலரும். ரத்த வெள்ளத்தில் பலரை மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றார்கள். ஃபொன்சேகாவையும்.

பலத்த அடி. விவரிக்க முடியாத கோரம். ஏராளமான ரத்த சேதம். மார்பிலிருந்து அடி வயிறு வரையிலான பகுதிகள் பலத்த சேதமுற்றிருந்தன. எனவே, நிறைய ஆபரேஷன்கள் தேவைப்பட்டன. தேசிய மருத்துவமனையின் இயக்குனர் டாக்டர் ஹெக்டர் வீரசிங்கே (Hector Weerasinghe), சினிமா டாக்டர்கள் மாதிரி, `எதையும் இப்ப சொல்லமுடியாது' என்றுதான் முதலில் சொன்னார்.

ஆனால், பத்து டாக்டர்கள் அடங்கிய குழுவின் தீவிர சிகிச்சையின் பலனாக ஃபொன்சேகா பிழைத்துக்கொண்டார்.

ராஜபக்ஷேவின் அன்றைய தொலைக்காட்சி உரையில் வேறெது குறித்தும் அவர் பேசவில்லை. இதுதான். இது ஒன்றுதான். கண் துடைப்புப் போர் நிறுத்தம் பற்றிய எரிச்சல் கலந்த ஏமாற்றம். `இனி நான் சும்மா இருக்க மாட்டேன்' என்கிற எச்சரிக்கை. அந்த ஆண்டு பிப்ரவரி 23-ம் தேதி ஜெனிவாவில் நடைபெற்ற அமைதிப் பேச்சுவார்த்தைக்குப் பிறகு புலிகள் தரப்பில் இருபது குண்டு வெடிப்புச் சம்பவங்களை நடத்தியிருக்கிறார்கள், நாற்பத்தேழு ராணுவ அதிகாரிகளையும் இருபத்தெட்டு அப்பாவி மக்களையும் கொன்றிருக்கிறார்கள், நூற்று முப்பத்தொன்பது பேருக்குப் படுகாயம் ஏற்பட்டிருக்கிறது என்பது போன்ற சில புள்ளிவிவரங்களையும் சொன்னார்.

யாரும் அவ்வளவாகப் பொருட்படுத்தவில்லை. மக்களும் ராணுவத்தினரும் மிரண்டிருந்தார்கள். ராணுவத் தலைமையகத்துக்கு உள்ளேயே, ராணுவத் தளபதி மீது ஒரு தாக்குதல். எப்படி இது சாத்தியம்?

மருத்துவமனையில் கண்மூடிப் படுத்திருந்த ஃபொன்சேகாவும் அமைதியாக இதனைத்தான் யோசித்துக்கொண்டிருந்தார். `எப்படி சாத்தியம்? எப்படியோ சாத்தியமாகியிருக்கிறது. எப்படியோ நான் பிழைத்திருக்கிறேன். இனி நான் எழவேண்டும். பூரண குணமடைய வேண்டும். உடற்பயிற்சிகள் செய்து பழைய நிலைக்குத் திரும்பவேண்டும். நடக்க முடியவேண்டும். ஓடமுடியவேண்டும். பாய முடியவேண்டும். மீண்டும் வேலைக்குத் திரும்ப முடியவேண்டும்.

எல்லாம் முடிந்தால், அடுத்து நான் முடிக்கவேண்டியது விடுதலைப் புலிகளை. இதுதான். இது ஒன்றுதான் இனி இலக்கு. விடமாட்டேன். இனி ஏழேழு ஜென்மத்துக்கும் போர் நிறுத்தம் என்பது இல்லை. விடுதலைப் புலி இயக்கத்தின் கடைசி மனிதன் இருக்கும் வரை ஓயமாட்டேன். என்ன சொல்கிறீர்கள் மிஸ்டர் பிரசிடெண்ட்?'

ராஜபக்ஷே சொல்ல ஒன்றுமில்லை. எப்போது அவரும் ஃபொன்சேகாவும் வேறு வேறு மாதிரி சிந்தித்திருக்கிறார்கள்?

அன்றைக்கு மருத்துவமனைக்குச் சென்று உயிர் மீட்டுத் திரும்பி, பணியில் சேர்ந்த நாள் ஃபொன்சேகா ஆரம்பித்த யுத்தம்தான் இன்றைக்குக் கிளிநொச்சியில் வந்து நிற்கிறது. என்ன ஆனாலும் போர் நிறுத்தம் கிடையாது என்று அவரைச் சொல்ல வைக்கிறது. இது இறுதி யுத்தம் என்று அதிபரைப் பேசவைக்கிறது. பேசத் தயார் என்று புலிகள் கூப்பிட்டாலும் `மாட்டேன், போ' என்று முறைத்துக்கொண்டு நிற்க வைக்கிறது.

தலைமுறை தலைமுறையாகத் தொடரும் யுத்தம்தான். ஆனாலும் இந்தத் தனிமனிதப் பழி உணர்வுக்கு இங்கே ஒரு முக்கிய இடம் இருக்கிறது!

பா.ராகவன்

நன்றி:- குமுதம்

(தொடரும்)
 

Friday, November 14, 2008

ஒரு நச் கவிதையும், கொலைமிரட்டலும்

ஜமீனுடனான தனது அனுபவங்கள் பற்றி Mr.யூ.கே சொல்வது:

காலேஜ் சேர்ந்து முதல்வருடம் விடுமுறையில் நல்லா வெட்டியா சுத்திட்டு இரண்டாமாண்டில் காலெடுத்து வைத்தோம். அப்போது எங்களுக்கு தெரியாது. இனிமேல் நாங்கள் இப்படியொரு அற்புத(ப)மான ஜீவனுடன் மீதி காலத்தை ஓட்ட வேண்டுமென்று. அது வேறு யாருமில்லை எங்க தலை ஜமீன்தான். தலையைப் பத்திச் சொல்லணும்னா ஸ்கூல்பையன் மாதிரி ஒரு தோற்றம். பால்வடியும் முகம். ஆனால் அது பால்வடியும் முகமில்லை.. ஜிங்காரோ பீர் வடியும் முகம்னு போகப்போகத்தான் தெரிஞ்சுக்கிட்டோம். அந்த முகத்துக்கு கொஞ்சம் கூட பொருத்தமில்லாமல் ஒரு கட்டை மீசைன்னு அம்சமா இருப்பார்னா பார்த்துக்கங்களேன்..

ஜமீனை முதன்முதலில் பார்த்த நம்ம காலேஜ் கவிஞர் தனக்கு தோன்றிய அந்த அற்புத வரிகளை கவிதையாக கொட்டியிருக்கார்.அவரது அனுமதியுடன் அந்த அற்புதமான கவிதை உங்கள் பார்வைக்கு..

ஒரு
கிங்ஸ்
கிங்ஸ்
புகைக்கிறதே....

- எழுச்சி கவிஞர் ஏழரையடி ஏகாம்பரம்

நம்ம கவிஞர் ஏழரையடி ஏகாம்பரம் சொன்னதுபோல் இப்படிதான் முதன்முதலில் காட்சியளித்தார் நம்ம தலை ஜமீன். முதலில் பார்த்ததும் சரி.. ஏதோ ஒரு ஸ்டூடண்டின் தம்பி போல...அதான் ஹாஸ்டல் ரூமில் உட்கார்ந்திருக்கான்னு நினைச்சேன்.ஆனால் அப்புறம்தான் தெரிஞ்சது.. அவர்தான் நம்ம தலை ஜமீன் அப்படிங்கறதும், எங்க எல்லோரையும் விட ரொம்ப உயர்ந்தவர்(வயசுல மட்டும்) அப்படிங்கறதும். வேற வழியில்லாமல் தலையை எங்கள் நண்பர் குழுவில் இணைச்சுக்கிட்டோ ம்.ஸாரி.. ஸாரி.. ரொம்ப பெரிய மனசு பண்ணி ஜமீன்தான் எங்களை அவரோட நண்பர்களா ஏத்துக்கிட்டார்னு சொல்றதுதான் சரியா இருக்கும்.

ஜமீனுடனான இவ்வளவு கேவலமான அறிமுகத்துக்கு அப்புறம் அவருடன் தொடர்ந்து நடந்த,நடக்கும் இனிமையான நிகழ்வுகளை(கருமம்டா சாமி...) இனிவரும் பதிவுகளில் பகிர்ந்துகொள்கிறேன்.

ஜமீனுடனான தனது அனுபவங்கள் பற்றி Mr.கே.கே சொல்வது:

நம்ம யூ.கே சொன்ன மாதிரிதான் எனக்கும் ஜமீனுடனான முதல் சந்திப்பும். பார்ப்பதற்கு ஸ்கூல்பையன் மாதிரி ஒரு தோற்றம். ஆனால் அந்த முகத்துக்கு கொஞ்சமும் பொருந்தாத ம.பொ.சி மீசை என பெரும் காமெடியனாய் காட்சியளித்தார்.

நம்ம தலை ஜமீன்கிட்ட எனக்கு ரொம்ப பிடிச்ச விஷயம் என்னன்னா யாரையும் சந்தித்த அடுத்தநொடியே அவர்களுக்கு மாமா,மச்சி என அன்புடன் உறவுமுறை வைத்துக் கூப்பிடுவது.

காலேஜில் அவரது உயிர் நண்பர் ஏழரையடி ஏகாம்பரத்துடன், நாலரையடி ஜமீன் இனைந்து கூச்சப்படாமல் (ரொம்பவே கஷ்டப்பட்டு) அவரின் தோளில் கையைப் போட்டவாறு தம் அடிக்க செல்லும் அழகைக் காண கண்கோடி வேண்டும்.

ஜமீனிடம் ஒரு ஸ்பெஷாலிட்டி என்னன்னா அவரோட ஆளுமைத்திறன். அது எப்படின்னா ஹாஸ்டல்ல இருந்து 4பேர் சேர்ந்து கடைக்கு போனாங்கன்னா கூட சேர்ந்துக்குவார். அங்கே கடையில் நாட்டாமை ரேஞ்சுக்கு நடுவில் உட்கார்ந்து கொண்டு நண்பர்களை பார்த்து ஒரு அதிகார தோரணையோடு இரு விரல்களை V வடிவில் சமிக்ஞை செய்து தம்மை வாங்கிக்கொண்டு வந்து கையிலே தரச்சொல்வார். ஆனால் நமது நண்பர்களோ ஏதும் அறியாதவர்கள் போல் வந்த வேலையைக் கவனிக்க, கடைசியில் நம்ம தலை "பொல்லாதவன்" கருணாஸ் ரேஞ்சுக்கு "ஏ நீ வாங்கேன்..ஏ நீ வாங்கேன்.." என்று கெஞ்சியும் கூட ஒன்றும் நடக்காததால் கடைசியில் தானே வாங்கி அடித்தாலும் கூட கடைசி வரைக்கும் தனக்கே உரிய கெத்தை விட்டுத்தராமல் புண்பட்ட நெஞ்சை சூனாப்பானா வடிவேல் ரேஞ்சுக்கு புகையைவிட்டு ஆத்துவார்.

(இதோ இப்போது இந்தப் பதிவை டைப் செய்துக் கொண்டிருக்கும்போது கூட மர்ம நபர் ஒருவர் இதுவரை வெளியான பதிவுகளை நீக்குமாறும், இனியும் பதிவுகளைத் தொடராமல் இருக்கும்படியும் மீறினால் கூலிப்படையை ஏவி தாக்கப் போவதாகவும் சற்று முன்னர்தான் டெலிபோனில் கொலைவெறியுடன் பேசினார். ஆனால் பாவம் அந்த முகம் தெரியாத நண்பருக்கு தனது மிரட்டல் உரையாடல முழுவதும் பதிவு செய்யப்படும் என தெரிய வாய்ப்பில்லை. வலைப்பூ நண்பர்களுக்காக அந்த டெலிபோன் உரையாடல் இதோ முழுமையாக.)


Mr.கே.கே: ஹலோ.....
ம.நபர் : நான் யாருங்கறது இருக்கட்டும்.. ஏதோ பிளாக்கெல்லாம் எழுதறீங்களாமே?

Mr.கே.கே: என்ன பிளாக்குங்ண்ணா.. புரியலையே..

ம.நபர்: ஏ ******* ஜிங்காரோங்கற பேருல ஏதோ எழுதறியாமே?

Mr.கே.கே: ஜிங்காரோவா? என்ன சொல்றீங்க? சத்தியமா புரியலை..

ம.நபர்: எல்லாம் எனக்கு தெரியும் தம்பி.. சொல்லவேண்டியவங்க சொன்னாங்க..

Mr.கே.கே: யாருண்ணா? என்ன சொன்னாங்க?

ம.நபர்: கடைசியா நான் ஒண்ணே ஒண்ணு சொல்லிக்கறேன். மவனே ஜிங்காரோ ஜமீன்ங்கற பேருல ஏதாவது எழுதுனீங்கண்ணு தெரிஞ்சது தொரத்தி தொரத்தி அடிப்பேன். மீறி எழுதுனேன்னா அடுத்த பதிவுபோட அந்த கை இருக்காது தெரிஞ்சுக்கோ.. டேய் ** இன்னொருத்தன் இருப்பானே? போனை அவன்கிட்ட குடுடா..

(Mr.கே.கே சற்றே உதறலெடுத்தாலும் கூட சமாளித்து பேசியபடி Mr.யூ.கே விடம் போனை தருகிறார்.Mr.யூ.கேவுக்கும் உள்ளுக்குள் உதறலெடுத்தாலும் வெளிக்காட்டிக் கொள்ளாமல் பேசுகிறார்)

ம.நபர்: என்னடா ஏதோ பிளாக்கெல்லாம் எழுதறீங்களாமே?

Mr.யூ.கே: பிளாக்குன்னா என்னங்ண்ணா? சத்தியமா எனக்கு தெரியலை.. முதல்ல பிளாக்குன்னா என்னன்னு சொல்லுங்க.. மேற்கொண்டு பேசுவோம்.
( இதை கேட்டவுடன் சட்டென்று அமைதியான எதிர்முனை அப்படியே உரையாடலை துண்டிக்கிறது)

இருந்தபோதும் நாங்கள் ஆரம்பத்திலேயே கூறியபடி அஞ்சாநெஞ்சன்களான இந்த வெட்டிப்பசங்க எந்த தாக்குதலையும் எதிர்கொள்வோம் என கூறிக்கொள்கிறோம்


பின்குறிப்பு: மேற்கண்ட கொலைமிரட்டல் குறித்து மற்ற நண்பர்களுடன் விவாதித்து எடுக்கப்படும் முடிவு இதோ...


வலைப்பதிவர்களான நண்பர்கள் மூவரும் கூடியிருக்க, போனில் வந்த கொலைமிரட்டல் குறித்து விவாதம் ஆரம்பிக்கிறது.


Mr.கே.கே: நம்ம எதிர்பார்த்த மாதிரியே எதிர்ப்புகள் வர ஆரம்பிச்சுடுச்சு.. அதைப்பற்றி பேசத்தான் இந்த அவசரக்கூட்டம்
Mr.யூ.கே: ஆமாம். கே.கே வுக்கு வந்த அந்த போன்காலை நானும் அட்டெண்ட் செய்தேன்.கொஞ்சம் கடுமையாகத்தான் பேசினான் அந்த மர்ம நபர்.
Mr.என்.எஸ்: அப்போ என்ன சொல்றீங்க.. பெயரைக்கூட சொல்லாமல் மிரட்டிய அவனுக்குப் போய் பயந்துக்கிட்டு நிறுத்திடலாம்கிறீங்களா?
Mr.கே.கே: இல்லை.. அப்படி சொல்லலை. இதுவரை வந்த பதிவுகளுக்கு இந்த மிரட்டல் கொஞ்சம் அதிகமாத்தான் தெரியுது.
Mr.என்.எஸ்: கே.கே ஒண்ணு மட்டும் தெரிஞ்சுக்க.. இதுவரைக்கும் வெளியாகியிருக்கும் பதிவுகளில் நீயும்,யூ.கே வும் சும்மா பிள்ளையார் சுழிதான் போட்டிருக்கீங்க.. அப்படி ஒண்ணும் பெருசா ஏதும் எழுதிடலை. இதுக்கே இப்படி யோசிச்சிங்கன்னா எப்படி? எதுக்கு சொல்றேன்னா நான் களத்தில் இறங்கி பதிவுமட்டும் போட்டேன்னா பிளாக்ஸ்பாட்டே சும்மா அதிரும் தெரிஞ்சுக்கங்க.. நமக்கு இந்த செண்டிமெண்ட் எல்லாம் ஒத்துவராது.நடந்ததையெல்லாம் புட்டுபுட்டு வைப்பேன் தெரியுமில்ல..
Mr.யூ.கே: இல்லை. இப்படியெல்லாம் நடக்கும்னு எதிபார்த்ததுதான். இருந்தாலும்..
(என்று ஏதோ சொல்ல ஆரம்பிக்கும்போதே மொபைல் ஒலிக்க லைனில் வருகிறார் பருத்திவீரன் சித்தப்பூ.விஷயத்தை சொல்லி ஸ்பீக்கர் போனை ஆன் செய்து மேஜையில் வைத்தவுடன் வைப்ரேட் மோடில் வைக்காமலேயே போன் அதிர ஆரம்பிக்கிறது. அந்தளவுக்கு சித்தப்பூ டென்ஷனில் எகிறுகிறார்)
சித்தப்பூ(போனில்): ஏண்டா எவனோ ஒரு பன்னாடைப் பய ஏதோ பேசினான்னு பதிவு போடறதை விட்டுட்டு, இப்படி மீட்டிங் போட்டுக்கிட்டு இருக்கீங்களே? வெட்கமாயில்லை உங்களுக்கெல்லாம்?
Mr.கே.கே: அதில்லை சித்தப்பூ.. அவன் பேசின தோரணையை பார்த்தா கொஞ்சம் உதறலாகத்தான் இருக்கு.. அதான்...
சித்தப்பூ(போனில்): டேய் அந்த ** எங்கயாவது 1 ரூபாய் செல்லாத காசை கீழே கண்டெடுத்து இருப்பான்.அதுக்கு பீடி கூட வாங்க முடியலையேங்கற கடுப்பில பப்ளிக் பூத்துலேயிருந்து போனை போட்டு ஒரு அல்ப ஆசைக்கு பேசியிருப்பான்.அதைப்போய் ஒரு விஷயம்னு உட்கார்ந்து பேசறீங்களேடா.. அதுவுமில்லாமல் யூ.கே. சொன்னதை வைச்சுப் பார்த்தா அந்த **க்கு பிளாக்குன்னா என்னான்னே தெரியலை.. இதுகூட தெரியாத ** பேசினான்னு பொழப்பை விட்டுட்டு மீட்டிங்காம் மீட்டிங்கு.. ஆகற வேலையைப் பாருங்கடா.. அவன் 1 ரூபாய்க்கு பேசினான்னு என்னை 20 ரூபாய்க்கு எஸ்.டி.டி போட வைச்சுட்டீங்களேடா.இனிமேல் அவன் சொன்னான் இவன் சொன்னான்னு போனைப் போட்டீங்க தொலைச்சிடுவேன்.. தெரிஞ்சுக்கங்க.. என்ன செய்விங்களோ எனக்கு தெரியாது.இனிமேல் தினமும் ரெண்டு பதிப்பு போட்டே ஆகணும் ஞாபகம் வைச்சுக்கங்க.. என்றபடியே லைனை கட் செய்கிறார்.
Mr.என்.எஸ்: அப்போ என்ன செய்யலாம்?
Mr.கே.கே: அதான் சித்தப்பூவே சொல்லிட்டாருல்ல.. வழக்கம்போல நம்ம வேலையை தொடர வேண்டியதுதான்..
Mr.யூ.கே: சரி.. நம்ம பசங்கதானே.. கொஞ்சம் அடக்கியே வாசிப்போம்னு பார்த்தால் விட மாட்டேங்குறானுங்க. நாளையிலிருந்து புது வேகத்தோடு களமிறங்கி பரபரப்பான பதிவுகளை போடணும்.. ஓ.கே..
Mr.கே.கே வும் என்.எஸ் ஸீம் ஒருமித்த குரலில் ஓ.கே என்றுசொல்ல மீட்டிங் இனிதே முடிவடைகிறது.