Saturday, December 6, 2008

ஸார் டிக்கெட் ப்ளீஸ்........



வீட்டுக்கருகில் இருக்கும் பஸ் ஸ்டாப். ஐ.டி காரிடாரின் ஆரம்பத்தில் இருக்கும் முக்கிய ஜங்ஷன் என்பதால் எந்நேரமும் பேருந்து பயணச்சீட்டுகளை பரிசோதனை செய்யும் செக்கிங் இன்ஸ்பெக்டர்களின் தொல்லை மிகவும் அதிகம். நேரம் காலம் தெரியாமல் பீக் அவரில் பஸ்ஸை ஓரங்கட்டி செக்கிங் என்ற பெயரில் கொடுமை செய்து கொண்டிருப்பார்கள். அவ்வப்போது சில காமெடியான நிகழ்ச்சிகளை காண நேரிடும். இன்று காலையில் ஒரு அனுபவம்.

இன்று காலையில் பேருந்துக்காக காத்துக் கொண்டிருந்தேன். என்னருகில் வழக்கம்போல் செக்கிங் இன்ஸ்பெக்டர் 4 பேர் கருமமே கண்ணாயிரமாக தங்கள் பணியை செய்ய காத்துநின்றனர். அப்போது கோயம்பேட்டிலிருந்து ஒரு பேருந்து வேகமாக வந்தது. கூட்டம் வெகு குறைவு. கிட்டத்தட்ட காலியாக இருந்த பேருந்தில் ஒருவர் ஒரு காலை வெளியில் தொங்கவிட்டபடியே புட்போர்டு அடித்தபடி வந்தார். பார்ப்பதற்கு பக்கா கிராமத்து ஆள் லுக். காதுவரைக்கும் வைத்திருந்த மீசையும், உள்ளே போட்டிருந்த பிங்க் கலர் பனியன் தெரியுமளவுக்கு டிரான்ஸ்ப்ரண்டான வெள்ளை சட்டையும் அணிந்து கலக்கலாக இருந்தார். மெட்ரோவுக்குள் இவ்வளவு வித்தியாசமாய் வந்ததாலோ என்னவோ முதல்பார்வையிலேயே என்னைப்போல் பலரது கவனத்தையும் கவர்ந்தார். சுவாரசியமாய் அவரையே பார்த்துக் கொண்டிருந்தேன். அந்த பஸ்ஸில் டிக்கெட் செக் செய்ய ஆயத்தமாயினர் 4 ஆபிஸர்ஸ்.

நம்மாளோ பேருந்து நிற்பதற்கு முன்னரே அதிலிருந்து குதித்து இறங்கினார். இறங்கியவர் யாரையும் கவனிக்கவில்லை. வேகமான நடையில் ரோட்டைக்கடந்து அடுத்தபக்கம் செல்ல ஆரம்பித்தார். செக்கிங் இன்ஸ்பெக்டர்களும் அவரை சற்று தாமதமாகத்தான் கவனித்தனர்.

இனி அவர்களுக்கு இடையே நடந்த உரையாடல்....

இன்ஸ்: ஹலோ மிஸ்டர்.....

நம்மாளிடம் பதிலே இல்லை...

இன்ஸ்: ஹலோ உங்களைத்தான்....

நம்மாளோ திரும்பி பார்க்கவேயில்லை.

இன்ஸ்: யோவ்... வெள்ளைசட்டை உன்னைத்தாய்யா... (கிட்டத்தட்ட அவர் பின்னாலேயே ஓடினார்)

நம்மாள் இப்போது கொஞ்சம் ஸ்லோ ஆனார். ஆனால் அங்கேயே நின்றார்.

இன்ஸ்: ஏய் மீசை.. உன்னைத்தான்யா கூப்பிடறேன்.. (செம கடுப்பில்)

நம்மாள் மெதுவாக திரும்பிப்பார்த்து, யாரை என்னையா? என்பதுபோல் சைகைசெய்தார்.

இன்ஸ்: உன்னைத்தாய்யா... வா இங்கே.. என்றார் அதே ஏகவசனத்தில்...

அதைக்கேட்ட நம்ம ஆளுக்கு வந்த கோபத்திலே கண்கள் சிவந்துடுச்சு. மீசை வேற துடிக்க ஆரம்பிச்சுடுச்சு.இந்த மீசை துடிக்கிறது எல்லாம் நிறைய பாரதிராஜா சினிமாவுல பார்த்திருக்கேன். இப்பத்தான் முதல்தடவை நேரிலே பார்த்தேன்.

வேகவேகமாக திரும்பிவந்தார் இறங்கிய இடத்துக்கே..

நம்மாளு: யாரைப்பார்த்து ஏய்ன்னு சொன்னே? (கர்ணகடூரமான குரலில்)

இன்ஸ்: உன்னைத்தான்.

நம்மாளு: டேய்! நான் யார்ன்னு தெரியுமா? என்னைப்பார்த்து எப்படிடா டேய்ன்னு சொன்னே?

இன்ஸ்: பஸ்ஸைவிட்டு இறங்கினால் டிக்கெட்டை கொடுக்க வேண்டியதுதானே..டிக்கெட் எங்கேங்க?

நம்மாளு: அப்படி மரியாதையா கேட்க வேண்டியதுதானே.. அதை விட்டுப்புட்டு என்னமோ மரியாதையில்லாம கூப்பிடறே? நீயெல்லாம் படிச்சவனாய்யா?

இன்ஸ்: ஹலோ மிஸ்டர்! மரியாதையா பேசுங்க..

நம்மாளு: நீ முதல்ல மரியாதையா பேச கத்துக்கய்யா.. ஏய்யாம்ல ஏய்... ஏதோ அசலூரா இருக்கவும் தப்பிச்சே.. இதுமட்டும் எங்க ஊரா இருந்ததுன்னு வையி.. ******(கெட்டவார்த்தை) பொலி போட்டிருப்பேன். தெரிஞ்சுக்க...

இதைக்கேட்ட இன்ஸ்பெக்டரின் முகம் சிறுத்துவிட்டது. பதில் பேசவேயில்லை. வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த சிலர் உள்ளேபுகுந்து விலக்கிவிட இன்னமும் முனகியபடியே அங்கிருந்து நகர்ந்தார் கிராமத்து பெருசு.

உணமையில் டிக்கெட் செக்கிங் என்ற பெயரில் இவர்கள் செய்வது கொஞ்சம் அட்டூழியம்தான். பீக் அவரில் பஸ்ஸை ஓரங்கட்டுவது. டிக்கெட் எடுக்காமல் யாரேனும் அகப்பட்டாலும் முடிந்தவரை பேரம்பேசி தனியே கறப்பது என தொடர்ந்து நடந்துகொண்டுதான் இருக்கிறது. நானே பலமுறை இந்த பேரம் நடப்பதை பார்த்திருக்கிறேன்.

எது எப்படியோ இனிமேல் அந்த செக்கிங் இன்ஸ்பெக்டர் யாராவது சிறுவனாக இருந்தால் கூட "ஸார் டிக்கெட் ப்ளீஸ்" என்றுதான் கேட்பார்.

Thursday, December 4, 2008

நடிகர் பிரபுதேவா மகன் மரணம்

பிரபல த‌மி‌ழ் நடிகரு‌ம், இய‌க்குனருமான ‌பிரபுதே‌வி‌ன் ம‌க‌ன் உட‌ல் நல‌க்குறைவா‌ல் இ‌ன்று காலை மரண‌ம் அடை‌ந்தா‌ர்.

நடன இய‌க்குனராக இரு‌ந்து நடிகர், இயக்குனரானவர் பிரபுதேவா. இவ‌ர் லதா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு விஷால் (13), ரிஷி, ராகவேந்திரா, ஆதித்தேவா என 4 மகன்கள்.

கட‌ந்த ‌சில மாத‌ங்களாக விஷா‌ல் உடல் நலக் குறைவா‌ல் செ‌ன்னை‌யி‌ல் உ‌ள்ள த‌னியா‌ர் மரு‌த்துவமனை‌யி‌ல் சிகிச்சையளிக்கப்பட்டு வந்தது. இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி விஷால் மரணம் அடைந்தார்.

விஷால் உடல் செ‌ன்னை ராஜாஅண்ணாமலைபுரத்தில் உள்ள அவரது வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு‌ள்ளது. நடிகர்கள், இய‌க்குன‌ர்க‌ள் உ‌ள்பட பல‌ர் அஞ்சலி செலுத்தின‌ர்.

விஷால் உடல் இன்று மாலை பெசன்ட் நகரில் தகன‌ம் செய்யப்படுகிறது