Tuesday, November 25, 2008

யுத்தம் சரணம் தொடர் நண்பர்களுக்காக.


எழுத்தாளர் பா.ராகவன் ஈழப்பிரச்னை குறித்து குமுதம் ரிப்போர்ட்டரில் எழுத ஆரம்பித்திருக்கும் யுத்தம் சரணம் நமது நண்பர்களுக்காக இங்கே ஒவ்வொரு வாரமும்.


யுத்தம் சரணம் ! - 1 ஒரு காரின் கதை. 
 
 
 
முதலில் படத்தைப் பாருங்கள். நன்றாக, உற்றுப் பாருங்கள். நசுங்கிய நிலையில் இருக்கும் டயர்களைப் பாருங்கள். பிறகு, நூற்றுக்கணக்கான பொத்தல்களுக்கும் சிராய்ப்புகளுக்கும் உள்ளாகியிருக்கும் அதன் உடல் பகுதி. எந்தக் கணமும் உதிரலாம் என்னும்படியாக, கசக்கி, விரித்து உதறிய பாலிதீன் தாள் போலிருக்கும் முன்புறக் கண்ணாடி வரை பார்த்துவிட்டீர்களா? மிகவும் கவனம். காரின் முன் சீட்டின் ஓரத்தில் ரத்தம் தெரிகிறதா? புகைப்படத்தில் தெரியவில்லை என்றாலும் பின் சீட்டில் இதனைக் காட்டிலும் ஏராளமான ரத்தம்.இது மட்டும் புல்லட் ப்ரூஃப் செய்யப்பட்ட லிமோஸினாக இல்லாமல், வேறு ஏதேனுமொரு சாதாரண காராக இருந்திருக்கும் பட்சத்தில், புகைப்படத்தில் கார் நிற்கும் இடத்தில் நீங்கள் ஒரு தகரக் குவியலைத்தான் பார்த்திருப்பீர்கள்.

இது ஒரு மனித வெடிகுண்டுத் தாக்குதலின் எச்சம். லெஃப்டினண்ட் ஜெனரல் சரத் ஃபொன்சேகா (Sarath Fonseka) தப்பித்தது தற்செயல். கண்டிப்பாக உயிர் போய்விடும் என்றுதான் எல்லோரும் நினைத்தார்கள். அப்படியொரு நிலைமையில்தான் அவரை ராணுவ மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றார்கள். ஏனென்றால், தாக்குதல் நடந்த இடத்தில், அந்தக் கணமே எட்டு ராணுவ அதிகாரிகள் பலியாகிவிட்டார்கள். இருபத்தேழு பேர் பாதி உயிருடன் கிடந்தார்கள். யாரும் பிழைக்கக்கூடும் என்று யாருக்கும் நம்பிக்கை இல்லை.

தப்பித்தது தற்செயல். அதுவும் ஃபொன்சேகா. அவரைக் குறி வைத்து நிகழ்த்தப்பட்ட தாக்குதல்தான் அது. 2006 ஏப்ரல் மாதம் 25-ம் தேதி, செவ்வாய்க்கிழமை. அன்றைக்குத் தொலைக்காட்சியில் என்னவோ முக்கிய உரை ஆற்றப்போவதாக அதிபர் ராஜபக்ஷே சொல்லியிருந்தார். என்னவாக இருக்கும்? போர் நிறுத்தம் அமலில் இருந்த சமயம். நார்வே தூதுக்குழுவினர் நம்பிக்கைக்கும் அவநம்பிக்கைக்குமிடையே நடைபோட்டுக் கொண்டிருந்தார்கள். எங்காவது, ஏதாவது ஒரு புள்ளியில் சமரசத்துக்கான இழையைப் பிடித்துவிடும் நோக்கத்தில் இருந்தவர்கள் அவர்கள். முன் அனுபவம் உண்டு. விடாக்கண்டர் யாசிர் அராஃபத்தையும் கொடாக்கண்டர் இட்ஸாக் ராபினையுமே இழுத்துப் பிடித்து உட்கார வைத்து முன்னதாக ஓஸ்லோ ஒப்பந்தத்துக்கு வழி வகுத்தவர்கள். பாலஸ்தீன் விஷயத்தில் சாதிக்க முடிந்ததை இலங்கை விஷயத்திலும் சாதித்துக் காட்டிவிட்டால் உலகம் தொப்பியைக் கழற்றி வணக்கம் சொல்லும்.
 
சண்டை போடுவதைக் காட்டிலும் சிரமமானது சமாதானம் செய்வது. பேச்சு ஒன்றுதான் ஆயுதம்.வக்கணை அவசியம். வாய்ஜாலம் இன்றியமையாதது. எல்லாவற்றைக் காட்டிலும் முக்கியம், அடித்துக்கொள்ளும் இரு தரப்புக்கும் நம்பிக்கை ஏற்படுத்துவது. அதற்கு உள்ளார்ந்த அக்கறையும் ஈடுபாடும் தேவை.
நார்வே அதைத்தான் செய்துகொண்டிருந்தது.

2002-ல் இலங்கை அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையே போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டது. 2004 ஜூலைக்குப் பிறகு நார்வே சமாதானக் குழுவின் நடவடிக்கைகள் சூடு பிடிக்க, இடைப்பட்ட காலத்தில் இதனைக் காட்டிலும் பெரிய சம்பவம் ஏதும் அங்கே நடக்கவில்லை. இதுதான். இது மட்டும்தான். போதாதா?

கொழும்புவில் உள்ள ராணுவத் தலைமையகத்தில் அன்றைக்கு வழக்கம்போல் காலை வந்து வேலைகளைப் பார்த்துக்கொண்டிருந்தார் ஃபொன்சேகா. ஒரு மணிக்கு அதிபரிடமிருந்து தொலைபேசி அழைப்பு வந்தது. அநேகமாக மாலை ஆற்றவிருக்கும் தொலைக்காட்சி உரை தொடர்பாக ஏதோ பேசிவிட்டு சாப்பிடப் புறப்பட்டார்.

அதிபர் மகிந்த ராஜபக்ஷேவுக்கும் அவருக்குமான உறவு, வெறும் அதிபர்  - ராணுவத் தளபதி உறவல்ல. மேலே. ரொம்ப மேலே. ரத்த உறவுகளுக்கெல்லாம் மேம்பட்ட நட்புறவு அவர்களுடையது. கருத்து வித்தியாசங்களே வராத அளவுக்கு ஒரே மாதிரி சிந்திக்கக்கூடியவர்கள் இருவரும். நோக்கம் தெளிவானது. புலிகளை ஒழித்துவிடலாம். சிம்பிள்.

எனில் பேச்சுவார்த்தை, அரசியல் தீர்வு, போர் நிறுத்தம், சமாதான உடன்படிக்கை?

 
அதெல்லாம் இல்லாமலா? அவசியம் இருக்கும். அதிலென்ன சந்தேகம். ஆனால் நோக்கம் ஒன்றுதான். புலிகள் கூடாது. பிரபாகரன் கூடாது. தனி ஈழம் கூடாது. தமிழர்களும் கூடாது.

இன்றைக்குப் புதுடெல்லியில் வந்து உட்கார்ந்துகொண்டு ஈழத் தமிழர்களின் பாதுகாப்புக்கு முழு உத்தரவாதம் தருகிறேன் என்று அவர் சொல்லிவிட்டுப் போனதை நல்லதொரு நகைச்சுவை என்றுதான் எடுத்துக்கொள்ள வேண்டும். தப்பித்தவறியும் சந்தேகப்பட்டுவிடக் கூடாத ஜீவாத்மா அவர். ஒன்றும் செய்வதற்கில்லை. வந்த வழி அப்படி. பார்த்துப் பயின்ற சரித்திரம் அப்படி.

அவசரமில்லை. அதையெல்லாம் பின்னால் பார்க்கலாம். இப்போது மதிய உணவுக்குப் புறப்பட்ட ஃபொன்சேகா.

கொழும்பு ராணுவத் தலைமையகம் என்பது மிகப்பெரிய வளாகம். கிட்டத்தட்ட ஒரு கிராமம் அளவுக்கு விரிந்து பரந்த பிராந்தியம். அருகிலேயே ராணுவ அமைச்சகம் இருக்கிறது. சற்றுத்தள்ளி கூட்டு ராணுவப் படையின் தலைமை மையம். ஒரு ராணுவ ஆஸ்பத்திரி. அதிகாரிகளுக்கும் ஜவான்களுக்குமான மெஸ். மிகப்பெரிய மைதானம்.

வெளியாள் யாரும் அத்தனை சுலபத்தில் அந்தப் பகுதிக்குள் நுழைந்துவிட முடியாது. பலமான பாதுகாப்பு. பல அடுக்குப் பாதுகாப்பு. துப்புரவாக ஆள் அடையாளம் பார்த்து, விசாரிக்காமல் யாரையும் உள்ளே விடமாட்டார்கள்.

ஆனால் அன்றைக்குச் சற்று ஏமாந்தார்கள். ராணுவ ஆஸ்பத்திரியில் அன்றைக்கு கர்ப்பவதிகளுக்கான சிறப்புப் பரிசோதனை முகாம் என்று அறிவித்திருந்தார்கள். ராணுவ ஜவான்களின் குடும்பத்தினர், உறவினர், நண்பர்கள் யார் வேண்டுமானாலும் வந்து இலவச செக்கப் செய்துகொள்ளலாம். கர்ப்பம் தரித்தவராக இருக்கவேண்டும். அவ்வளவுதான்.
 
எனவே அந்தப் பெண், ஒரு கர்ப்பிணி வேஷம் எடுத்துக்கொண்டார். நிறைமாதம். நடக்கமுடியாத நடை. முகத்தில் களைப்பு. எண்ணெய் காணாத தலை.

காலை முதல் அம்மாதிரி பல  கர்ப்பிணிகளை நிறுத்தி விசாரித்த செக்யூரிட்டி ஆட்கள், பசிவேலை வந்தபோது சற்றே அசந்து போனார்கள்.`யாரம்மா? எதற்கு வந்தாய்? செக்கப்பா? அதோ பார், அதுதான் ஆஸ்பத்திரி. வாசலில் சீட்டு எழுதி வாங்கிக்கொள். உள்ளே போய் வரிசையில் உட்கார்.'
அனுப்பிவிட்டார்கள். கேட்டிருக்கலாம். `நீ யாருடைய உறவுக்காரப் பெண்? அடையாள அட்டை எங்கே?'

அந்தப் பெண் தயாராகத்தான் வந்திருந்தாள். ஒரு போலி அடையாள அட்டை அவள் வசமிருந்தது. அதையும் மீறிப் பிரச்னை வந்தாலும் சமாளிப்பது ஒன்றும் சிரமமில்லை. உயிருக்குத் துணிந்துவிட்ட பிறகு கையகல அட்டை ஒரு விஷயமா?

சரியாக ஒன்றரைக்கு தளபதி சரத் ஃபொன்சேகா தன் அலுவலகத்திலிருந்து புறப்பட்டார்.

எவர்சில்வர் நிற லிமோஸின் கார். முன்னும் பின்னும் பாதுகாப்புக்கு பைக்கில் நான்கு ஜவான்கள். ஆயுதமேந்திய மெய்க்காப்பாளர்கள். வேறு வழியில்லை. சாப்பிடப் போகும்போதுகூட சண்டைக்குப் போகும் ஆயத்தங்களுடன்தான் கிளம்பியாகவேண்டும். சூழ்நிலை அப்படி. போர் நிறுத்தக் காலம் என்பது பூவுலகத்துக்கான அறிவிப்பு. தீவுலகத்தில் போர் நிறுத்தம் என்றால் அடுத்த போருக்கான ஆயத்தம் என்று பொருள்.
ஃபொன்சேகா தனது அலுவலகத்திலிருந்து புறப்பட்டு, ராணுவ ஆஸ்பத்திரி வளாகத்தைக் கடக்கிற வினாடியைத்தான் அந்தப் பெண் உத்தேசித்திருந்தாள்.

பாய்ந்துவிட வேண்டும்.

தளபதியின் காருக்கு முன்னால் வரும் இரண்டு மோட்டார் சைக்கிள் வீரர்கள்தான் பிரச்னை. சமாளித்து குறுக்கே புகுந்துவிட்டால் விஷயம் முடிந்துவிடும். யாரும் எதிர்பார்த்திராத வேளை, எதிர்பார்க்கவே முடியாத இடம் என்பதால் வாய்ப்புகளின் சதவிகிதம் அதிகம்.

அவள் காத்திருந்தாள். கார் வந்தது. வேகம் குறையாத கார்.

கண்ணிமைக்கும் நேரத்தில் அந்தப் பெண் சாலையில் பாய்ந்தாள். ஒரு கணம் இருக்குமா? அதை விடக் குறைவான நேரம். ஃபொன்சேகாவின் காருக்கு இடப்புறம் முன்னே வந்த மோட்டார் சைக்கிள் ஜவானுக்கு ஏதோ அசம்பாவிதம் என்று உள்ளுணர்வு சொன்னது. அதே கணம்தான். வண்டி ஓட்டிக்கொண்டிருந்த வேகத்திலேயே, குறுக்கே பாய்ந்து வரும் அந்தப் பெண்ணை நோக்கித் தன் இடது காலைத் தூக்கி உதைத்தார்.
அவள் வெடித்தாள். அது வெடித்தது.
 
இன்னும் ஓரடி அந்தப் பெண் முன்னால் வந்திருப்பாளேயானால் ஃபொன்சேகா தப்பித்திருக்க முடியாது. தூக்கி எறியப்பட்ட காரின் முன் சீட்டில் இருந்த மெய்க்காப்பாளர் இறந்தார்.

உடன் வந்த ஜவான்கள் இறந்து போனார்கள். அருகே இருந்த மேலும் சிலரும். ரத்த வெள்ளத்தில் பலரை மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றார்கள். ஃபொன்சேகாவையும்.

பலத்த அடி. விவரிக்க முடியாத கோரம். ஏராளமான ரத்த சேதம். மார்பிலிருந்து அடி வயிறு வரையிலான பகுதிகள் பலத்த சேதமுற்றிருந்தன. எனவே, நிறைய ஆபரேஷன்கள் தேவைப்பட்டன. தேசிய மருத்துவமனையின் இயக்குனர் டாக்டர் ஹெக்டர் வீரசிங்கே (Hector Weerasinghe), சினிமா டாக்டர்கள் மாதிரி, `எதையும் இப்ப சொல்லமுடியாது' என்றுதான் முதலில் சொன்னார்.

ஆனால், பத்து டாக்டர்கள் அடங்கிய குழுவின் தீவிர சிகிச்சையின் பலனாக ஃபொன்சேகா பிழைத்துக்கொண்டார்.

ராஜபக்ஷேவின் அன்றைய தொலைக்காட்சி உரையில் வேறெது குறித்தும் அவர் பேசவில்லை. இதுதான். இது ஒன்றுதான். கண் துடைப்புப் போர் நிறுத்தம் பற்றிய எரிச்சல் கலந்த ஏமாற்றம். `இனி நான் சும்மா இருக்க மாட்டேன்' என்கிற எச்சரிக்கை. அந்த ஆண்டு பிப்ரவரி 23-ம் தேதி ஜெனிவாவில் நடைபெற்ற அமைதிப் பேச்சுவார்த்தைக்குப் பிறகு புலிகள் தரப்பில் இருபது குண்டு வெடிப்புச் சம்பவங்களை நடத்தியிருக்கிறார்கள், நாற்பத்தேழு ராணுவ அதிகாரிகளையும் இருபத்தெட்டு அப்பாவி மக்களையும் கொன்றிருக்கிறார்கள், நூற்று முப்பத்தொன்பது பேருக்குப் படுகாயம் ஏற்பட்டிருக்கிறது என்பது போன்ற சில புள்ளிவிவரங்களையும் சொன்னார்.

யாரும் அவ்வளவாகப் பொருட்படுத்தவில்லை. மக்களும் ராணுவத்தினரும் மிரண்டிருந்தார்கள். ராணுவத் தலைமையகத்துக்கு உள்ளேயே, ராணுவத் தளபதி மீது ஒரு தாக்குதல். எப்படி இது சாத்தியம்?

மருத்துவமனையில் கண்மூடிப் படுத்திருந்த ஃபொன்சேகாவும் அமைதியாக இதனைத்தான் யோசித்துக்கொண்டிருந்தார். `எப்படி சாத்தியம்? எப்படியோ சாத்தியமாகியிருக்கிறது. எப்படியோ நான் பிழைத்திருக்கிறேன். இனி நான் எழவேண்டும். பூரண குணமடைய வேண்டும். உடற்பயிற்சிகள் செய்து பழைய நிலைக்குத் திரும்பவேண்டும். நடக்க முடியவேண்டும். ஓடமுடியவேண்டும். பாய முடியவேண்டும். மீண்டும் வேலைக்குத் திரும்ப முடியவேண்டும்.

எல்லாம் முடிந்தால், அடுத்து நான் முடிக்கவேண்டியது விடுதலைப் புலிகளை. இதுதான். இது ஒன்றுதான் இனி இலக்கு. விடமாட்டேன். இனி ஏழேழு ஜென்மத்துக்கும் போர் நிறுத்தம் என்பது இல்லை. விடுதலைப் புலி இயக்கத்தின் கடைசி மனிதன் இருக்கும் வரை ஓயமாட்டேன். என்ன சொல்கிறீர்கள் மிஸ்டர் பிரசிடெண்ட்?'

ராஜபக்ஷே சொல்ல ஒன்றுமில்லை. எப்போது அவரும் ஃபொன்சேகாவும் வேறு வேறு மாதிரி சிந்தித்திருக்கிறார்கள்?

அன்றைக்கு மருத்துவமனைக்குச் சென்று உயிர் மீட்டுத் திரும்பி, பணியில் சேர்ந்த நாள் ஃபொன்சேகா ஆரம்பித்த யுத்தம்தான் இன்றைக்குக் கிளிநொச்சியில் வந்து நிற்கிறது. என்ன ஆனாலும் போர் நிறுத்தம் கிடையாது என்று அவரைச் சொல்ல வைக்கிறது. இது இறுதி யுத்தம் என்று அதிபரைப் பேசவைக்கிறது. பேசத் தயார் என்று புலிகள் கூப்பிட்டாலும் `மாட்டேன், போ' என்று முறைத்துக்கொண்டு நிற்க வைக்கிறது.

தலைமுறை தலைமுறையாகத் தொடரும் யுத்தம்தான். ஆனாலும் இந்தத் தனிமனிதப் பழி உணர்வுக்கு இங்கே ஒரு முக்கிய இடம் இருக்கிறது!

பா.ராகவன்

நன்றி:- குமுதம்

(தொடரும்)
 

2 comments:

Anonymous said...

பா.ராகவன் நல்ல சுவையான கற்பனை கலந்த கதை எழுதுகிறார்.

Anonymous said...

I don't know what he is writing. I did'nt expect such a bad start from him.
sangamithra